சஜித்தின் தேசியப் பட்டியல் – வர்த்தகர்களும் உள்ளடங்குகிறார்களா?

சஜித்தின் தேசியப் பட்டியல் – வர்த்தகர்களும் உள்ளடங்குகிறார்களா?

நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களுடன் பலமான அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.

எனினும், வெறுமனே 35 ஆசனங்கள் தேசியப் பட்டியலுடன் 40 ஆசனங்களை வென்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் தேசியப் பட்டியல் சர்ச்சையை இன்னுமும் தீர்க்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, இன்னும் நால்வர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் நியமிக்கப்பட வேண்டும்.

கூட்டணியாக இணைந்து போட்டியிட்ட பல கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி, ஆசனங்களை பகிர்ந்தளிக்க முடியாமையே கட்சிக்குள் தேசியப் பட்டியல் சர்ச்சை ஏற்பட காரணம் என அக்கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், தேசியப்பட்டியல் தொடர்பில் இன்னும் கட்சிக்குள் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அந்த கலந்துரையாடல்களில் தாம் தொடர்புபடவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்காக அநேகமானோர் பலர் வரிசையில் காத்திருப்பதாகவும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் கூட தேசியப்பட்டியல் ஆசனங்களை கோரியுள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா வெளிப்படுத்தியுள்ளார்.

தேசியப் பட்டியல் ஆசனங்களை யாருக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் கட்சியே தீர்மானிக்க வேண்டும் எனக்கூறிய அவர், அது தொடர்பில் கட்சி இன்னுமும் தீர்க்கமான முடிவை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

தேசியப் பட்டியல் ஆசனங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களில் தாம் தொடர்புபடவில்லை என்பதால் இது தொடர்பான சரியான பதிலை தன்னால் வழங்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் நிக்வொன்றில் கலந்துக்கொண்டு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனங்களை நியமிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதத்தில் ஹர்ஷ டி சில்வா இவ்விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார்.

இதேவேளை, நிவ் ரத்ன அரிசி ஆலை உரிமையாளர் லங்கேஸ்வர மித்ரபாலவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஆசனமொன்றை கோரியுள்ளமை தொடர்பில் வெளியாகியுள்ளது.

நிவ் ரத்ன அரிசி ஆலை உரிமையாளர் லங்கேஸ்வர மித்ரபால , நடைபெற்று நிறைவடைந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்திக்கு நிதி வழங்கியுள்ளாரா என குறித்த அரசியல் நிகழ்வில் ஹர்ஷ டி சில்வாவிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதன்போது, அந்த விடயம் தொடர்பில் தனக்கு எதுவித தகவலும் தெரியாது எனவும், தேர்தலின் போது மேற்கொள்ளப்பட்ட நிதி நடவடிக்கைகள் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் கட்சியின் பொதுச்செயலாளர் மூலமே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.

ரத்ன அரிசி உரிமையாளர் தேசியப்பட்டியலில் உள்ளார் என்பது கூட எனக்கு ஆரம்பத்தில் தெரியாது அவர் நிதி வழங்கினாரா என்பது தொடர்பிலும் எனக்கும் தெரியாது எனவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பணத்தை வாங்கிவிட்டு தேசியப் பட்டியலில் இணைக்கும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எவ்வாறாயினும், குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது , கேள்வியை தவிர்க்கும் தொனியிலேயெ அவர் பதிலளித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக பார்க்கப்பட்டாலும் பலமான ஒரு எதிர்க்கட்சியாக இன்னும் தனது சேவையை ஆரம்பிக்கவில்லை.

நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்து நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்று நிறைவடைந்திருந்தாலும் கூட இன்னுமும் தேசியப் பட்டியல் ஆசனங்கள் கூட உரிய முறையில் நியமிக்கப்படவில்லை.

ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்த பல கட்சித் தலைவர்களும் தத்தமது தேசிய பட்டியல் ஆசனங்களில் உறுதியாக உள்ள நிலையில் தற்போது நிதி வழங்கியுள்ள பல வர்த்தகர்கள் தேசியப் பட்டியலைக் கோருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதன் உண்மைத் தன்மை எதுவாக இருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியோ, கூட்டணியோ நாடாளுமன்றில் தமது கடமையை சரிவர செய்ய வேண்டும்.

அதற்கு அறிவுள்ள புத்திசாலியானவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச இதை விடவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

செல்லும் இடமெல்லாம் ஐஎம்எப் தொடர்பிலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் குறைகளை மாத்திரம் காணும் சஜித் பிரேமதாச தனது கட்சிக்குள் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பிலும் சற்று அவதானம் செலுத்துவது சிறந்தது.

Share This