நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

அரசியல் சுய இலாபங்களுக்காகவும், பதவி ஆசை மற்றும் அதிகாரத் திமிர் ஆகிய காரணங்களுக்காகவும் இலங்கை அரசியல்வாதிகள் பலர் பல நுட்பங்களை கையாண்ட வரலாறுகள் உண்டு. அவை வெளிப்படுத்தப்பட்ட வரலாறுகளும் உண்டு.

தேர்தல் மேடைகளில் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக பல போலி வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

2022 ஆம் ஆண்டு நாடு மீள எழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. மீண்டும் மீண்டும் ஞாமூட்ட தயங்கும் ஒரு கசப்பான இறந்தகாலம் இலங்கை மக்களுக்கு காணப்பட்டது.

பொருட்களின் விலையேற்றம், பணம் இருந்தும் பொருட்களை வாங்க முடியாத நிலை, வரிசை யுகம், உயிரிழப்புகள் என பல நெருக்கடிகளையும் சிக்கல்களையும் நாடு எதிர்கொண்டிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு வருமானம் என்பது அவசியமாக இருந்தது உண்மைதான். எனினும், அது எந்தவகையிலாவது இருக்க வேண்டும் என மக்கள் கோரவுமில்லை அப்படியான ஒரு வருமானம் தேவையும் இல்லை.

அரசியல் அடிப்படையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போதைய அரசாங்கம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டை மீள கட்டியெழுப்பவே இம்முறை கையாளப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை சரியான ஒரு விளக்கமாக ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தனது சுய அரசியல் இலாபங்களுக்காக மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கி விட்டு அவை வெளிவந்தவுடன் அதற்கு சிறுகுழந்தைப் போல சாக்குபோக்கு கூறும் அரசியல் ஜாம்பவான் இன்னும் சற்று சிந்தித்து பொருத்தமான ஒரு விளக்கத்தை வழங்கியிருக்கலாம்.

புதிய அரசாங்கம் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி தொடர்பில் அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்கது. எனினும், அதற்கான சட்ட நடவடிக்கையும் வெகு விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் இவ்விடயம் முழுமையடையும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலப்பகுதியில் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க வெளிப்படுத்தியிருந்தார்.

அதில் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த சர்ச்சை தொடர்பிலேயே ரணில் விக்கிரமசிங்க பதிலளித்திருந்தார்.

எனினும், ரணில் வழங்கிய இந்த பதில் மக்களுக்கு திருப்திகரமானதாக இல்லை.

நாட்டுக்கு வருவாய் வேண்டும் என்பது நியாயமான ஒன்றாக இருந்தாலும், அதற்காக எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற ஒரு உரிமை யாராலும் யாருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

ஆக, ரணிலின் இந்த பதில் பல கேள்விகளை எழுப்புகிறது.

அரசியல் அடிப்படையில் வழங்கவில்லை எனக் கூறுகிறீர்கள், அப்படியானால் அரசியல்வாதிகளுக்கு ஏன் வழங்கினீர்கள்?

மக்களை குடி போதைக்கு ஆளாக்கி அடிமையாக்கி நாட்டுக்கு கிடைக்கும் வருவாய் எதற்கு? அதனால் பயன் பெறுபவர்கள் யார்?

இவ்வாறு வழங்கப்பட்ட மதுபான அனுமதிப் பத்திரங்களால் நாட்டுக்கு தான் வருவாய் என கூறுகிறீர்களே, அப்படியெனில் இந்த விடயம் தொடர்பில் ஏன் நாடாளுமன்றத்திலோ, மக்களுக்கு உரையாற்றும் போதோ அல்லது எந்தவொரு தேர்தல் மேடையிலோ பகிரங்கமாக அறிவிக்கவில்லை?

இந்த கேள்விகளுக்கு நிச்சயம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார்.

யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு அதற்கு பின்னர் கூறும் சிறுபிள்ளை காரணங்களை கேட்டுக் கொண்டு பேசாமல் இருக்க மக்கள் இன்னும் முட்டாள்கள் அல்ல.

புதிய மாற்றமொன்றை நோக்கி புதிய அரசியல் மறுமலர்ச்சியை நோக்கி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மறுபடியும் அவர்களை முட்டாள்களாக்க முயற்சித்தால் அதன் விளைவும் ரணிலையே சாரும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை பயன்படுத்தி அதி உட்ச மோசடியில் ஈடுபட்டுள்ளமை தற்போது வெளியாகியுள்ளது. நிச்சயம் அநுர அரசாங்கம் இதற்கு சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முறைகேடாக பயன்படுத்தி மேற்கொண்ட கீழ்தரமான ஒரு செயலாக இவ்விடயம் பார்க்கப்படுகிறது.

தேர்தல் பிரசாரங்களின் போது இளைஞர்களுக்கான எதிர்காலம் இயலும் ஸ்ரீலங்கா என்று மார்தட்டியவர், இளைஞர்களுக்கு மதுபானசாலைகளை தான் மிச்சம் வைத்துள்ளார்.

அரசாங்க வருமானத்திற்காகவே மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கினேன் எனக் கூறுவதில் என்ன பெருமை உள்ளது.

புதிய ஜனாபதியாக அநுரகுமார பதவியேற்பார் எனத் தீர்மானிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், “ நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்” என வாழ்த்து தெரிவித்திருந்தார் ரணில் விக்கிரமசிங்க.

எந்த தந்தை தன்னுடைய குழந்தை தீய வழியில் செல்வதை விரும்புவார்?

இது ஒரு தேசத்துரோகம், செய்த குற்றத்தை மறைக்க எத்தனை விளக்கங்கள் வழங்கினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

 

“ஒருவன் நாளிதழின் இன்றைய ஆசிரியர் தலையங்கம்”

Share This