
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சட்டங்களும் கடுமையாக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்தல்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சட்ட உரிமைகள் மட்டும் போதாது என்றும், சமூக மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சட்டங்களும் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி, உலகளவில் மூன்று பெண்களில் ஒருவர் வன்முறையை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 84 கோடி பெண்கள் தங்கள் வாழ்நாளில் உடல் ரீதியான அல்லது பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் பெண்களில் 20.4 சதவீதம் பேர் நெருங்கிய துணையினால் வன்முறைக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிப் பெண்களிடையே இந்த பாதிப்பு 25.5 சதவீதமாகக் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
வீதிகள், வேலைத்தளங்கள் மற்றும் இணையவழிகளில் பெண்கள் பல்வேறு வன்முறைகளை எதிர்கொள்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாட்டின் ஜனநாயகத்தையும் பொருளாதாரத்தையும் நேரடியாகப் பாதிப்பதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
