
பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுப்பு
பிலிப்பைன்ஸின் கடற்பரப்பில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் அதிகாரிகள், திங்கள்கிழமை அதிகாலையில் சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, உள்ளூர் நேரப்படி காலை 7:40 மணிக்குச் சற்று முன்னதாக மின்டானோ தீவுக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து உடன் வெளியேறுமாறும், கடற்கரைகள் மற்றும் துறைமுகங்களிலிருந்து விலகிச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த நிலநடுக்கத்தை 7.3 ரிக்டர் அளவில் இருக்கும் என ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் மதிப்பிட்டிருந்தது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தெற்கு பிலிப்பைன்ஸின் சில மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லுமாறு வலிறுயுத்தப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனம், அந்நாட்டின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
அதேபோல், ஜப்பானும் தனது பசிபிக் கடற்கரையின் பெரும் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
