பிரித்தானிய மன்னராட்சி வரலாறு எப்போது உருவானது? ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கிறது

பிரித்தானிய மன்னராட்சி வரலாறு எப்போது உருவானது? ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கிறது

உலகில் இன்னும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் பழைமையான ஆட்சிமுறைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது பிரித்தானிய முடியாட்சியாகும். இன்று மூன்றாம் சார்ள்ஸ் (Charles III) தலைமையில் இயங்கும் இந்த முடியாட்சி, வெறும் ஓர் அரச குடும்பத்தின் வரலாறு மட்டுமல்ல. அது இங்கிலாந்தின் அரசியல், சட்டம், பேரரசு, மதம் மற்றும் ஜனநாயக வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்புடையதாகும்.

பிரித்தானிய முடியாட்சி உண்மையில் எப்போது ஆரம்பமானது?

பண்டைய காலம் தொட்டு பிரித்தானிய முடியாட்சி பல கட்டங்களாக வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இன்றைய ஒன்றுபட்ட பிரித்தானியா உருவாகும் முன்பு பிரிட்டிஷ் தீவுகள் பல சிறிய இராச்சியங்களாகப் பிரிந்திருந்தன.

Wessex, Mercia, Northumbria, East Anglia போன்ற இராச்சியங்கள் அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக வலுவானவையாக இருந்தன. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் Viking படையெடுப்புகள் தீவிரமடைந்தபோது, இந்தச் சிறிய இராச்சியங்கள் உயிர்வாழ்வதற்காக ஒன்றிணைய வேண்டிய சூழல் உருவானது.

9ஆம் நூற்றாண்டில் Viking படையெடுப்புகள் அதிகரித்தபோது, Wessex இராச்சியத்தின் மன்னராக இருந்த Alfred the Great மிக முக்கியமான தலைவராக உருவெடுத்தார்.

Viking படைகளுக்கு எதிராக போராடிய அவர், ஆங்கிலப் பகுதிகளை ஒன்றிணைக்கத் தொடங்கினார். அதற்காக “King of the Anglo-Saxons” என்ற அடையாளத்தை அவர் உருவாக்கினார் என பிரித்தானிய வரலாறு தெரிவிக்கிறது.

Æthelstan என்பவரே “முழுமையான இங்கிலாந்தின் முதல் மன்னர்” என்று வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. கி.பி. 927ஆம் ஆண்டில் பல Anglo-Saxon பகுதிகளை ஒருங்கிணைத்து மைய ஆட்சியை உருவாக்கியதால், இங்கிலாந்து முடியாட்சியின் ஆரம்பம் அங்கிருந்தே தொடங்குகிறது என கருதப்படுகிறது.

இதனால் “பிரித்தானிய முடியாட்சி 1000 ஆண்டுகளுக்கும் மேலானது” என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால், பிரித்தானிய முடியாட்சி வரலாற்றில் 1066 மிக முக்கியமான ஆண்டாகும்.

முடியாட்சிக்கான முதல் முக்கிய படியாக அமைந்தது

இந்த ஆண்டில் William the Conqueror நோர்மண்டியிலிருந்து இங்கிலாந்தை கைப்பற்றினார். இது “Norman Conquest” என அழைக்கப்படுகிறது. இந்த வெற்றிக்குப் பின்னர் மன்னராட்சி மிகவும் மையப்படுத்தப்பட்டதுடன், நில அமைப்பும் (feudal system) மாற்றப்பட்டது. பிரெஞ்சுக் கலாசாரம் மற்றும் மொழி ஆகியன அரசவையில் ஆதிக்கம் செலுத்தியதுடன், ஆட்சித் திட்டமும் நவீனமயமாகியது.

இன்றைய பிரித்தானிய அரச குடும்பத்தின் அரசியல் அமைப்பு பல வகையில் 1066 க்குப் பிந்தைய காலத்திலிருந்தே உருவாகத் தொடங்கியது என பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

1215ஆம் ஆண்டு மன்னர் ஜோன் (King John) மக்னா கார்ட்டா (Magna Carta) என்ற முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இது மன்னரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியதுடன், சட்டத்தின் மேலாதிக்கத்தை உருவாக்கியது. அத்துடன், பாராளுமன்ற வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தது. இதுவே பின்னர் அரசியலமைப்பு முடியாட்சிக்கான முதல் முக்கிய படியாகவும் அமைந்தது.

தனிமனித சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிய நவீன ஜனநாயகத்தின் அடிப்படை மைல்கல்லாக மக்னா கார்ட்டா ஒப்பந்தம் கருதப்படுகிறது.

17ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசியலில் மிகப் பெரிய அதிர்வலைகள் ஏற்பட்டிருந்தன. முதலாம் சார்ள்ஸ் மன்னர் (Charles I) மற்றும் பாராளுமன்றத்திற்கிடையிலான மோதல் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது.

இதன் எதிரொலியாக 1649ஆம் ஆண்டு முதலாம் சார்ள்ஸ் மன்னருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், முடியாட்சியும் தற்காலிகமாக நீக்கப்பட்டு ஓலிவர் க்ரோம்வெல் (Oliver Cromwell) தலைமையில் குடியரசு ஆட்சி நிறுவப்பட்டமை பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மாற்றமாகும். என்றாலும், 1660ஆம் ஆண்டு முடியாட்சி மீண்டும் கொண்டு வரப்பட்டது.

அதன்பின் மன்னரின் அதிகாரம் குறைக்கப்பட்டதுடன், பாராளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டு அரசியலமைப்பு ரீதியாக முடியாட்சி உருவாகத் தொடங்கியது. 1688ஆம் ஆண்டு நடந்த “Glorious Revolution” மற்றும் 1689 Bill of Rights (உரிமைகள் சட்டமூலம்) மூலம் மன்னர் முழுமையான அதிகாரம் கொண்ட ஆட்சியாளர் அல்ல, என்பது சட்ட ரீதியாக உறுதிசெய்யப்பட்டது.

ஆயிரம் ஆண்டுகால அரசியல் பரிணாமத்தின் விளைவாகும்

தனி இராச்சியங்களாக இருந்த இங்கிலாந்தும் ஸ்கொட்லாந்தும் 1707 இல் Acts of Union (ஒன்றியச் சட்டங்கள்) மூலம் இணைக்கப்பட்டு Kingdom of Great Britain (பெரிய பிரிட்டன் இராச்சியம்) உருவாக்கப்பட்டது.

இதன் மூலம் “British Monarchy” (பிரிட்டிஷ் முடியாட்சி) என்ற அதிகாரப்பூர்வ அடையாளம் உருவானது. இதன் முதல் அரசியாக Anne (ஆன்) தெரிவானார். 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ் பேரரசு (British Empire) உலகின் மிகப்பெரிய பேரரசாக வளர்ந்தது.

விக்டோரியா மகாராணியின் (Queen Victoria) ஆட்சிக்காலத்தில் இந்தியா, ஆபிரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா உட்பட உலகின் பல பகுதிகளில் பிரித்தானியப் பேரரசின் ஆட்சி விரிவடைந்தது.

பின்னர் காலனித்துவத்துக்கு எதிராக உலகம் முழுவதும் எழுச்சியடைந்த சுதந்திரப் போராட்டங்கள் காரணமாக கொலனித்துவத்திலிருந்த பல நாடுகள் சுயாட்சி நாடுகளாக உருவாகின.

இன்றுள்ள பிரித்தானிய முடியாட்சி மிகவும் அடையாளப்பூர்வமானது மட்டுமே!. பாராளுமன்ற ஜனநாயகத்துடன் இணைந்ததுடன், அரசியலமைப்பின் கீழ் இயங்கி வருகிறது. அரசாங்கமே நடைமுறை அரசியல் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. மன்னராட்சி வெறும் சம்பிரதாயத்துக்காகவே பாதுகாக்கப்படுகிறது. என்றாலும், பிரித்தானியாவில் மன்னர்களுக்கு மிகப் பெரிய கௌரவம் இன்றும் உள்ளது.

பிரித்தானிய முடியாட்சி ஒரே நாளில் உருவான அமைப்பு அல்ல. அது Anglo-Saxon இராச்சியங்களிலிருந்து, Norman ஆட்சியிலிருந்து, பாராளுமன்றப் போராட்டங்களிலிருந்து, பேரரசு விரிவாக்கங்களிலிருந்து மெல்ல மெல்ல உருவான ஆயிரம் ஆண்டுகால அரசியல் பரிணாமத்தின் விளைவாகும்.

சில வரலாற்றாசிரியர்கள் கி.பி. 927ஆம் ஆண்டை அதன் தொடக்கமாகக் குறிப்பிடுகின்றனர். மற்றவர்கள் 1066 Norman Conquest-ஐ முக்கிய திருப்புமுனையாகக் கருதுகின்றனர். என்றாலும், அதிகாரப்பூர்வ “British Monarchy” (பிரித்தானிய பேரரசு) 1707ஆம் ஆண்டு தான் உருவானது என்பதே வரலாற்று உண்மையாகும்.

சு.நிசாந்தன்

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )