ஐரோப்பாவை உலுக்கும் குடியேற்ற எதிர்ப்பு அலை: நெருக்கடிகளுக்குக் காரணம் புலம்பெயர்ந்த மக்களா?

ஐரோப்பாவை உலுக்கும் குடியேற்ற எதிர்ப்பு அலை: நெருக்கடிகளுக்குக் காரணம் புலம்பெயர்ந்த மக்களா?

ஐரோப்பாவின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து இயக்குவதற்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், அவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அரசியல் குரல்களும் அதே வேகத்தில் வலுப்பெற்று வருகின்றன. வீட்டு வசதிப் பற்றாக்குறை, வேலைவாய்ப்புச் சவால்கள், மருத்துவச் சேவைகளின் மீதான அழுத்தம் எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த முரண்பாடு, ஐரோப்பாவின் எதிர்கால அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, அங்கு பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இந்த மாற்றங்கள் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தப்போகின்றன?

பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, பெல்ஜியம், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் குடியேற்ற எதிர்ப்பு அரசியல் தீவிரமடைந்து வருவதுடன், உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதும், வீட்டு வாடகைகள் அதிகரிக்கப்படுவதும், மருத்துவமனைகளில் காத்திருப்புப் பட்டியல் நீள்கின்றமையும், சமூக நலத்திட்டங்களுக்கான செலவுகள் உயர்கின்றமையும் என்பன குடியேற்ற எதிர்ப்புத் தரப்பினரின் பிரதான குற்றச்சாட்டுகளாக உள்ளன.

இந்தப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களே காரணம் என்ற கருத்து அரசியல் பிரசாரங்களில் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. ஆனால், “ஐரோப்பாவின் தற்போதைய நெருக்கடிகளைப் புலம்பெயர்ந்தவர்களின் வருகையுடன் மட்டும் தொடர்புபடுத்த முடியுமா? என்பதே ஆராயப்பட வேண்டிய முக்கியமான கேள்வியாகும்.

2015 ஆம் ஆண்டு குடியேற்ற அரசியலின் திருப்புமுனை!

ஐரோப்பாவை நோக்கிய புலம்பெயர்வு பல தசாப்தங்களாக இடம்பெற்று வந்தாலும் 2015ஆம் ஆண்டு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற போர்கள் மற்றும் வன்முறைகளால் பெருமளவிலான மக்கள் பாதுகாப்புத் தேடி ஐரோப்பாவை நோக்கி வந்தனர். அந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகளும் புலம்பெயர்ந்தவர்களும் ஐரோப்பாவை அடைந்ததாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
அப்போதைய ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் (Angela Merkel), அகதிகளை ஏற்றுக்கொள்வதில் மனிதாபிமான அணுகுமுறையை முன்னெடுத்தார். அவரது ‘நம்மால் இதைச் செய்ய முடியும்’ என்ற கருத்து சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

எனினும், அகதிகளின் வருகை அதிகரித்தபோது வீட்டு வசதி, சமூக ஒருங்கிணைப்பு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் அரச சேவைகளின் திறன் தொடர்பான விவாதங்களும் தீவிரமடைந்தன. இதன் பின்னர் குடியேற்றம் மனிதாபிமான விவகாரமாக மட்டுமன்றி, ஐரோப்பிய நாடுகளின் தேர்தல் அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சமாகவும் மாறியது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சார்ந்திருக்கும் ஐரோப்பா!

ஐரோப்பிய நாடுகள் தற்போது மக்கள் தொகை முதிர்ச்சியடைதல், குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் உழைக்கும் வயதுடைய மக்களின் எண்ணிக்கை குறைதல் போன்ற நீண்டகாலச் சவால்களை எதிர்கொள்கின்றன. இதனால் ஓய்வூதியம், மருத்துவப் பராமரிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான அரச செலவுகள் அதிகரிக்கின்ற அதேவேளை, பொருளாதாரத்தை இயக்குவதற்குத் தேவையான தொழிலாளர்களின் பற்றாக்குறையும் உருவாகின்றது.

இந்த இடைவெளியை நிரப்புவதில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். கட்டுமானம், விவசாயம், உணவகங்கள், போக்குவரத்து, மருத்துவம், முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சட்டபூர்வமாகப் பணிபுரியும் புலம்பெயர்ந்தவர்கள் வருமானம் ஈட்டுவதுடன் வரிகளையும் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புகளையும் செலுத்துகின்றனர்.

எனவே, புலம்பெயர்ந்தவர்கள் ஐரோப்பியப் பொருளாதாரத்திற்கு ஒரு சுமை மட்டுமே என்ற வாதம் முழுமையானதல்ல, ஒருபுறம் அவர்களின் உழைப்பைக் கோரிநிற்கும் பொருளாதாரக் கட்டமைப்பே, மறுபுறம் அவர்களின் வருகையை அரசியல் விவாதமாகவும் மாற்றியிருக்கிறது.

வீட்டு வசதியும் மருத்துவமும் – அடிப்படைக் காரணங்கள் என்ன?

அயர்லாந்தின் டப்ளின், பிரான்சின் பாரிஸ், ஜெர்மனியின் பெர்லின் உள்ளிட்ட நகரங்களில் வீட்டு வாடகைகள் அதிகரித்துள்ளன. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்குக்கூட வீடுகளைப் பெற்றுக்கொள்வது கடினமாகியுள்ளது. குறுகிய காலத்தில் அதிகமான மக்கள் ஒரு நகரத்தை நோக்கி வரும்போது வீடுகளுக்கான தேவை அதிகரிப்பது உண்மைதான். அந்த வகையில் குடியேற்றம் வீட்டு வசதிச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
ஆனால், புதிய குடியிருப்புகளைக் கட்டுவதில் ஏற்பட்ட தாமதம், மலிவு விலையில் கிடைக்கும் வீடுகளுக்கான பற்றாக்குறை, நிலத்தின் விலை உயர்வு மற்றும் நீண்டகாலத் திட்டமிடல் குறைபாடுகளும் இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. எனவே, குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமே இதற்கான தீர்வாக அமையாது.

மருத்துவத்துறையிலும் இதே முரண்பாடு காணப்படுகிறது. முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவச் சேவைகளுக்கான தேவை உயர்கின்ற அதேவேளை, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பராமரிப்புப் பணியாளர்களின் பற்றாக்குறையும் நிலவுகின்றது. இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்வதில் வெளிநாட்டு மருத்துவ மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர். இதனால், புலம்பெயர்ந்தவர்களைப் பொதுச் சேவைகளுக்கான தேவையை அதிகரிப்பவர்களாக மட்டுமே சுருக்குவது தவறான அணுகுமுறையாகும்.

வேலைவாய்ப்புப் போட்டியும் அரசியல் பிரசாரமும்

குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் சில துறைகளில் உள்ளூர் தொழிலாளர்களுக்கான போட்டி அதிகரிக்கலாம். குறிப்பாக, தொழிலாளர் உரிமைகள் முறையாகப் பாதுகாக்கப்படாத இடங்களில் குறைந்த ஊதியம் மற்றும் சுரண்டல் போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன.
எனினும், வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு குடியேற்றம் மட்டுமே காரணமல்ல. தானியக்கமயமாக்கல், ரோபோக்களின் பயன்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி போன்ற பாரம்பரிய வேலைவாய்ப்புகளின் தன்மையை மாற்றி வருகின்றன. தொழிற்சாலைகள், களஞ்சியங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல துறைகளில் மனித உழைப்புக்குப் பதிலாகத் தொழிநுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் அதிருப்தி வெளிநாட்டவர்களுக்கு எதிரான அரசியல் கோஷங்களாக மாற்றப்படுவது அடிப்படைப் பிரச்சினைகளை மறைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
இந்தச் சூழலை வலதுசாரி அரசியல் சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வீட்டு வசதிப் பற்றாக்குறை மற்றும் வேலைவாய்ப்புத் தொடர்பான அச்சம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களிடம் தேசிய அடையாளம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான பிரசாரங்கள் எளிதில் செல்வாக்குப் பெறுகின்றன.

2022ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் சுவீடனின் குடியேற்ற எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்ட ஜனநாயகக் கட்சி முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்தது. ஹங்கேரியும் 2015ஆம் ஆண்டு அகதிகள் வருகையைக் கட்டுப்படுத்த செர்பிய எல்லையில் வேலிகளை அமைத்தது. இத்தகைய நடவடிக்கைகள் குடியேற்றக் கொள்கை தொடர்பான ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளையும் வெளிப்படுத்துகின்றன.

சட்டவிரோதக் குடியேற்றமும் மனித உரிமைகளும்!

குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளில் சட்டவிரோத நுழைவு, போலி ஆவணங்கள், மனிதக் கடத்தல் மற்றும் தொழிலாளர் சுரண்டல் ஆகியவற்றையும் புறக்கணிக்க முடியாது. சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஒவ்வொரு அரசாங்கத்தினதும் பொறுப்பாகும்.
அதேவேளை, தனிநபர்களின் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த அல்லது இனத்தைச் சேர்ந்த அனைவரையும் சந்தேகத்திற்குரியவர்களாகச் சித்திரிப்பது நியாயமற்றது. போர் மற்றும் துன்புறுத்தலிலிருந்து தப்பி வருபவர்களின் பாதுகாப்பையும் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டிய மனிதாபிமானப் பொறுப்பும் ஐரோப்பிய நாடுகளுக்கு உண்டு.

ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் ஏற்படக்கூடிய தாக்கங்கள்!

ஐரோப்பிய நாடுகளில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இந்த அரசியல் மாற்றங்களிலிருந்து முற்றிலும் விலகி இருக்க முடியாது. பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், பிரித்தானியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தமிழர்கள் கல்வி, மருத்துவம், வணிகம், தொழிநுட்பம் போன்ற பல்வேறு தொழில்துறைகளில் பங்களித்து வருகின்றனர்.

பலர் சட்டபூர்வமாகக் குடியேறி, வரி செலுத்தி, குடும்பங்களை உருவாக்கி, தாம் வாழும் நாடுகளின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் ஓர் அங்கமாகியுள்ளனர். இருப்பினும், குடியேற்ற எதிர்ப்பு அரசியல் வலுப்பெறும்போது விசா புதுப்பித்தல், நிரந்தர வதிவிட அனுமதி, குடும்ப இணைவு, வேலை அனுமதி மற்றும் குடியுரிமைப் பெறுதல் போன்ற நடைமுறைகளில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக எதிர்காலத்தில் ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்பும் இளம் தமிழர்களும் கடுமையான தகுதி நிபந்தனைகளையும் ஆவணச் சரிபார்ப்புகளையும் எதிர்கொள்ள நேரிடலாம். எனினும், இத்தகைய மாற்றங்கள் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக அமையும் என்று கூற முடியாது. ஒவ்வொரு நாட்டினதும் சட்டங்களும் அரசியல் முடிவுகளும் வேறுபடுகின்றன.

எனவே, ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் தமது வதிவிட அனுமதி, வேலைவாய்ப்பு ஆவணங்கள் மற்றும் வரிப் பதிவுகளை முறையாகப் பேணுவதுடன், குடியேற்றச் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த அதிகாரபூர்வப் அறிவிப்புகளையும் கவனிக்க வேண்டும். உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்வதும் சமூகச் செயற்பாடுகளில் பங்கேற்பதும் நீண்டகால சமூக ஒருங்கிணைப்புக்கு உதவும்.

நெருக்கடிகளுக்குத் தீர்வு பலிகடா தேடுவதில் இல்லை!

ஐரோப்பாவின் தற்போதைய குடியேற்ற விவாதம் வெளிநாட்டவர்களை ஏற்றுக்கொள்வதா அல்லது கட்டுப்படுத்துவதா என்ற எளிய கேள்விக்குள் அடங்கிவிடுவதில்லை. அது மக்கள் தொகை மாற்றம், பொருளாதார வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய சிக்கலான விவகாரமாகும்.

வீட்டு வசதியை உறுதிப்படுத்துவது, மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவது, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பது, தொழிநுட்ப மாற்றங்களால் வேலை இழப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை அரசாங்கங்களின் அடிப்படைப் பொறுப்புகளாகும். இவற்றில் ஏற்படும் தோல்விகளுக்குப் புலம்பெயர்ந்த மக்களை மட்டும் குற்றஞ்சாட்டுவது பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது.

சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதும் உள்ளூர் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அவசியமானவை. அதேநேரத்தில், சட்டபூர்வமாக உழைத்து வாழும் வெளிநாட்டவர்களின் உரிமைகளும் கண்ணியமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

ஐரோப்பா எதிர்கொள்ளும் உண்மையான சவால் “குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதா? அல்லது அனுமதிப்பதா?” என்பதல்ல, பொருளாதாரத் தேவைகளுக்கும் சமூகப் பாதுகாப்புக்கும் இடையில் நியாயமான சமநிலையை உருவாக்குவதுதான். அந்தச் சமநிலை தோல்வியடையும் பட்சத்தில், அதன் பாதிப்புகள் ஐரோப்பிய சமூகத்துடன் முடிவடையாமல், அங்கு தமது எதிர்காலத்தை உருவாக்கியுள்ள ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களின் வாழ்விலும் எதிரொலிக்கக்கூடும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )