
ஆபிரிக்கா வர்த்தக விருது – 2026: இலங்கையர் ராஜமாணிக்கம் சத்தியமூர்த்திக்குச் சர்வதேச அங்கீகாரம்
இலங்கையின் நுவரெலியா மாவட்டம், பூண்டுலோயாவைச் சேர்ந்த ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி, சர்வதேச அளவில் நடைபெற்ற ஆபிரிக்க வர்த்தக மன்றம் மற்றும் விருதுகள் நிகழ்வில், சிறந்த வர்த்தகத் தலைவர் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஆடை மற்றும் ஆடை உற்பத்தித் துறையில் சிறந்த வர்த்தகத் தலைவருக்கான விருதே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி, கானா நாட்டின் தலைநகர் அக்கிராவில் அமைந்துள்ள கெம்பின்ஸ்கி ஹோட்டலில் (Kempinski Hotel, Accra, Ghana) இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஆபிரிக்காவின் 40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த நிகழ்வை UNIQUE Communications நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
டோகோ நாட்டின் Star Garments Togo SARL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகப் பணியாற்றும் ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி, டோகோ நாட்டின் சார்பில் ஒரே பிரதிநிதியாக இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
பூண்டுலோயா ஹொரே கீழ்ப்பிரிவைச் சேர்ந்த ராஜமாணிக்கம் தம்பதியினரின் மகனான இவர், பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றவராவார்.
தனது உழைப்பு, திறமை மற்றும் தொழில்துறை அனுபவத்தின் மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இவர், நுவரெலியா மாவட்டத்திற்கும் தனது சொந்த ஊரான பூண்டுலோயாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அவரது இந்தச் சாதனை இளைய தலைமுறையினருக்கும் வளர்ந்துவரும் தொழில்முனைவோருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
