
அமெரிக்கா, தனது முக்கிய வர்த்தக நட்பு நாடுகளுக்கு எதிராகப் புதிய வரி விதிப்புகளை அறிவித்துள்ளது
அமெரிக்கா, தனது முக்கிய வர்த்தக நட்பு நாடுகளுக்கு எதிராகப் புதிய வரி விதிப்புகளை அறிவித்துள்ளது.
அதிக உற்பத்தி மற்றும் சந்தைச் சமநிலையற்ற நிலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம் உள்ளிட்ட 14 நாடுகள் மற்றும் பொருளாதாரப் பகுதிகள் இந்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, நாடுகளுக்கும் பொருட்களுக்கும் ஏற்ப வரி விகிதங்கள் மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் வரையும், வியட்நாமுக்கு 35 சதவீதம் வரையும் வரிகள் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளுக்கு 20 அல்லது 25 சதவீத வரி விதிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன.
முன்னதாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் பரஸ்பர வரி விதிப்புகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, மாற்று சட்ட வழிகளில் வரிகளை விதிக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் மாதம் வர்த்தகக் கூட்டாளிகளின் நடைமுறைகள் தொடர்பில் அமெரிக்கா விசாரணையை ஆரம்பித்திருந்தது.
அமெரிக்காவின் தொழில்துறையைப் பாதுகாத்து, உள்நாட்டு உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் அதிகரிப்பதே இந்த வரி விதிப்புகளின் நோக்கம் என அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார்.
