வரி வரம்புகளை குறைக்கும் அரசாங்கம் – பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

மதிப்பு கூட்டப்பட்ட வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு வரியின் பதிவு வரம்பைக் குறைக்கும் அரசாங்கத்தின் திட்டத்துடன், சுமார் 25,000 முதல் 30,000 புதிய வரி கோப்புகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
150 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருவாயை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 வரவு செலவுத் திட்டத்தில் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் சமூகப் பாதுகாப்புவரி (SSCL) ஆகியவற்றின் வருடாந்திர வரம்புகள்60 மில்லியன் ரூபாவில் இருந்து 36 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்படும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.
இதையொட்டி, வரி வலையின் கீழ் உள்ள மளிகைக் கடைகள் உட்பட சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள், நாள் ஒன்றுக்கு சராசரியாக 100,000 ரூபாவிற்கு விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டால், தற்போது வரிக்கு பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இதன் மூலம் ஏற்படும் வரிச்சுமை நுகர்வோர் மீது சுமத்தப்படும். இந்த வரவு செலவுத் திட்டம், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதும், அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வருவாய்த் துறையின் (IRD) மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், வர்த்தகர்கள் வரியை நுகர்வோர் மீது சுமத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், அது தவிர்க்க முடியாதது என கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு உள்நாட்டு வருவாய்த் துறையின் இலக்கு 2,085 பில்லியன் ரூபாவாக இருந்தது என்றும், இதுவரை இலக்கில் 88 சதவீதம் எட்டப்பட்டுள்ளதாகவும், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய முடியும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
இலக்கு வைக்கப்பட்ட துறைகளில் சிறிய அளவிலான ஹோட்டல்களும் அடங்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு வருவாய்த் துறை பணியாளர் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளரும் மூத்த துணை ஆணையருமான ஜே.டி. சந்தன, சமூகப் பாதுகாப்பு வரி செலுத்துவதைத் தவிர்த்து வந்த வாகன இறக்குமதியாளர்களும் புதிய வரி நடவடிக்கைகளின் கீழ் வரியைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.
வாகனங்களை இறக்குமதி செய்யும் போது அல்லது தயாரித்து விற்பனை செய்யும் போது சமூகப் பாதுகாப்பு வரி வசூலிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
