
2026ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களால் 2,463 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை, நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, 5,868 பாரிய விபத்துக்களும், 9,870 சிறிய விபத்துக்களும், 4,488 சொத்துச் சேதங்களை ஏற்படுத்திய விபத்துக்களும் பதிவாகியுள்ளன.
விபத்துக்களில் அதிகளவானோர், அதாவது 813 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் சுமார் 900 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் பின்னால் அமர்ந்து பயணித்த 168 பேரும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துகளில் 165 சைக்கிள் ஓட்டுநர்கள், 190 வாகன ஓட்டுநர்கள் மற்றும் 240 பயணிகளும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், உயிரிழப்புகளை ஏற்படுத்திய விபத்துக்கள் 11ஆல் அதிகரித்துள்ள போதிலும், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16ஆல் குறைந்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையிலும், கவனக்குறைவாகவும் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
