
ஈரானுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுவிட்டோம் – அமெரிக்கா அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது அமெரிக்காவின் வெற்றி எனவும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இராணுவ வீரர்கள் இந்த வெற்றியை சாத்தியமாக்கினார்கள் எனவும் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹார்முஸ் நீரிணையை மீளவும் திறக்க செய்துள்ளனர் எனவும் கரோலின் லீவிட் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக “ஒபரேஷன் எபிக் ஃபியூரி” என்பது நான்கு முதல் ஆறு வாரங்கள் நீடிக்கும் ஒரு நடவடிக்கை என்று ஜனாதிபதி தொடக்கத்திலிருந்தே கூறிவந்ததாக கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா 38 நாட்களில் தனது முக்கிய இராணுவ இலக்குகளை அடைந்து, அவற்றை விஞ்சியும் செயல்பட்டது” என்றும் கரோலின் லீவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி போர் தொடுத்திருந்தது.
இதனையடுத்து முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. ஈரானின் இந்த நடவடிக்கையினால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
அத்துடன், இஸ்ரேலையும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகளையும் குறிவைத்து ஈரான் கடுமையான தாக்குதல்களை நடத்தியிருந்தது.
இதனால் மத்திய கிழக்கு முழுவதும் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டிருந்தது. ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்பொல்லா அமைப்பினரும் போரில் களம் இறங்கியிருந்தனர்.
ஹார்முஸ் நீரிணை வழியாக முன்னெடுக்கப்பட்ட எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தடைப்பட்டதால் உலக நாடுகள் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தன.
உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்த நிலையில், பல நாடுகளில் கடும் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டது.
இந்நிலையில், ஈரான் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், ஹார்முஸ் நீரிணையை உடனடியாக மீள திறக்க வேண்டும் எனவும், அணு சக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் எனவும் அமெரிக்கா ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அவ்வாறு இல்லையெனில் ஈரானை ஒரே இரவில் அழித்துவிடுவேன் எனவும், ஈரான் ஒரு போதும் மீண்டு வாராது எனவும் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலையுடன் ஈரானுக்கு விதிக்கப்பட்டிருந்த காலகெடு முடிவடைந்திருந்த நிலையில், ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சம் நிலவியிருந்தது.
அத்துடன், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் பொது மக்கள் நேற்று மாபெரும் மனித சங்கிலி போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.
ஈரான் முழுவதும் உள்ள முக்கிய பாலங்கள் மற்றும் மின் நிலையங்களில் மக்கள் தேசியக் கொடிகளை ஏந்தியபடி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போர்க் குற்றவாளிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களுக்குத் தாங்கள் அஞ்சவில்லை என்றும், அதனால் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் ஆபத்தான இடங்களுக்கு வந்ததாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் பதற்றம் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியிருந்த நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் இரண்டு வார கால போர் நிறுத்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டதாகவும், தாக்குதல்களை நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரான் மீதான பேரழிவுத் தாக்குதலை இன்று இரவு நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டிரம்ப் தனது பதிவில், ‘ஈரான் நாடு’ என்பதற்கு மாற்றாக ‘ஈரானிய இஸ்லாமியக் குடியரசு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ஹார்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
ஈரான் மீதான குண்டுவீச்சையும் தாக்குதலையும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க ஒப்புக்கொண்டதாகவும், இது ஒரு இருதரப்பு போர் நிறுத்தமாக அமையும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இராணுவ இலக்குகளையும் நாம் அடைந்து, அவற்றை விடுத்துச் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதோடு, மத்திய கிழக்கில் அமைதிக்கு வழிவகுக்கும் ஈரானுடனான நீண்டகால அமைதி குறித்த தெளிவான உடன்படிக்கையை நோக்கி வெகுதூரம் முன்னேறியுள்ளோம் என்பதே இந்த முடிவிற்கான காரணம் என்று டிரம்ப் சுட்டிக்காட்டிள்ளார்.
ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவு தமக்குக் கிடைத்ததாகவும், அதனைப் பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியமான அடிப்படையாகக் கருதுவதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தின் சர்ச்சைக்குரிய அம்சங்கள் அனைத்திலும் அமெரிக்காவும் ஈரானும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துவிட்டன, ஆனால் அந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்து முடிக்க இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதி என்ற முறையிலும், மத்திய கிழக்கு நாடுகளின் சார்பாகவும், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த இந்தப் பிரச்சினையைத் தீர்வு காணும் நிலைக்குக் கொண்டு வந்திருப்பது தனக்கு பெருமையாகும் என டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மக்கள் திரண்டிருந்த நிலையில், ஈரானிய அரச தொலைக்காட்சி அமெரிக்காவுடனான போர் நிறுத்தத்தை வெற்றியாகக் காட்டி அறிவித்துள்ளது.
அந்த ஒளிபரப்பில், ஆக்கிரமிப்பு செய்யாமை, தடைகளை நீக்குதல் மற்றும் அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேலும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது குதாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்திவிட்டதாகவும், பேச்சுவார்த்தைகளிலும் இணையும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், போர் நிறுத்தம் ஈரானுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், லெபனானுக்குப் பொருந்தாது என்றும், லெபனான் மீதான தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்றும் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
