அதிக விலைக்கு அரிசி விற்றால் முறைப்பாடு செய்யலாம்

அதிக விலைக்கு அரிசி விற்றால் முறைப்பாடு செய்யலாம்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி இன்று (10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்று (09) வௌியிடப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச விலையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலின் படி, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.

புதிய அரிசி விலை அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், அதற்கு மேலதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“எனவே, வர்த்தக சமூகம், உற்பத்தியாளர்கள் ,மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களிடம் நாங்கள் அறிவித்த விலைக்கு ஏற்ப அரிசியை கொள்வனவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முறைகேடாக அல்லது அதிகப்படியாக அரிசி விற்பனை நடந்தால், நுகர்வோர் ஆணையத்தின் 1977 என்ற எண்ணுக்கு அழைத்து முறைப்பாடு செய்யலாம்.
மேலும் நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யலாம்.” எனக் கூறியுள்ளார்.

Share This