மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் அரசியல் தலையீடுகள் – ஜனாதிபதி தலையிட வேண்டுமென இரவீ ஆனந்தராஜா கோரிக்கை

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் அரசியல் தலையீடுகள் – ஜனாதிபதி தலையிட வேண்டுமென இரவீ ஆனந்தராஜா கோரிக்கை

மாவட்ட ஒருங்கிணைப்பு (DCC) குழுக்கூட்டங்களில், அரசியல் தலையீடுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக கையாள்வதால் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர் முன்னாள் ஐ.நா உலக உணவுத்திட்டம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் அலுவலர் இரவீ ஆனந்தராஜா, குற்றம்சாட்டியுள்ளார்.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்கள் பொதுமக்கள் நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டிய நிலையில், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டங்களை தங்களுடைய அரசியல் வாதங்களுக்கான மேடையாக மாற்றி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அதிகாரிகளின் செயற்பாடுகளை தரக்குறைவாக மட்டம்தட்டி, தங்களுக்கு விசேட அதிகாரம் இருப்பது போன்ற தோரணையில் துஷ்பிரயோகம் செய்வதை அவதானித்தேன் என அவர் தனது விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, திருக்கோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் சமீப காலங்களில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டங்களில் பல குறைபாடுகள் வெளிப்பட்டுள்ளன. குறிப்பாக, சில உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் கூட்ட விபரங்களை வீடியோவாக பதிவேற்றி பிரசாரம் செய்வது சட்டத்திற்குப் புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயல்களை தடுக்கும் விதமாக ஆளுநர் அல்லது ஆளுநர் சமூகமளிக்காதவிடத்து அரசாங்க அதிபர் தலைமையில் கூட்டம் நடைபெற வேண்டும். புதிய நடைமுறைகள் மூலம் DCC கூட்டங்களை அரசியல் மேடைகளாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், சட்டம் மீறிய செயற்பாடுகளை தடுக்க தகுந்த பணிப்புரைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதியிம் இரவீ ஆனந்தராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This