‘பைத்தியக்காரன் கோட்பாடும்’ மீண்டும் ஒரு சுயெஸ் கால்வாய் வரலாறும்

‘பைத்தியக்காரன் கோட்பாடும்’ மீண்டும் ஒரு சுயெஸ் கால்வாய் வரலாறும்

மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் வல்லரசுகள்?

‘பைத்தியக்காரன் கோட்பாடும்’ மீண்டும் ஒரு சுயெஸ் கால்வாய் வரலாறும்

தடுமாறும் அமெரிக்கா – சீறும் சீனா! ஹோர்முஸ் போர்க்களத்தின் முழுமையான அலசல்

 

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் கைகோர்த்துத் தொடுத்த போரின் விளைவாக, இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு இக்கட்டான நிலையில் நிற்கிறார். ‘கௌரவத்தைக்’ காப்பாற்றிக்கொண்டு எவ்வாறு வெளியேறுவது என்று தெரியாமல் அவர் தடுமாறிக்கொண்டிருப்பதாகவே சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வியட்நாம், ஈராக், மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்கா சந்தித்த வரலாற்றுத் தோல்விகளின் வரிசையில், ஈரானும் ஒரு தீராத பிரச்சினையாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

*நிக்ஸனின் ‘பைத்தியக்காரன் கோட்பாடு’ (Madman Theory):*

முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் 1968-இல் கையாண்ட அதே ‘பைத்தியக்காரன் கோட்பாட்டை’ இன்று ட்ரம்ப் கையில் எடுத்துள்ளார். “நான் எதையும் செய்யத் துணிந்துவிட்டேன், அணுவாயுதப் பொத்தான் என் கைக்கு அருகில்தான் இருக்கிறது” என எதிராளியைப் பயமுறுத்திப் பணிய வைப்பதே இந்தத் தந்திரம்.

ஈரானின் நாகரிகத்தை ஒரே இரவிலேயே அழிப்பேன், என ட்ரம்ப் விடுத்த மிரட்டல்கள் இதன் ஒரு பகுதியே. எனினும், அன்று நிக்ஸன் எதிர்கொண்ட அதே கதியையே இன்று ட்ரம்ப்பும் சந்திக்க நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

*பாகிஸ்தானின் தூதுவமும் தற்காலிகப் போர்நிறுத்தமும்*

ஈரான் அரசு தற்போது பிளவுபட்டுள்ள நிலையில், ஒரு புதிய திருப்பமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரானின் மீதான நேரடி இராணுவத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இருப்பினும், ஈரானியத் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

*சீனாவின் நுழைவும் நேரடி மோதல் அச்சமும்”

ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் இந்த முற்றுகை, இப்போது மற்றொரு உலக வல்லரசான சீனாவை உள்ளே இழுத்துள்ளது. ஈரானியக் கச்சா எண்ணெயின் முக்கிய இறக்குமதியாளரான சீனா, தனது எண்ணெய்க் கப்பல்களைப் பாதுகாக்க 48ஆவது பாதுகாப்புப் படைப்பிரிவை (Task Force 48) அரபிக்கடலில் நிலைநிறுத்தியுள்ளது.

டாங்ஷான் (122) மற்றும் தாகிங் (576) போன்ற சீனாவின் நவீன ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் இந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன.

ஈரானிய எண்ணெயைச் சுமந்து வரும் சீனக் கப்பல்களை அமெரிக்கா சோதனையிட முயன்றால், அது இரு வல்லரசுகளுக்கும் இடையே ஒரு நேரடிப் போராக வெடிக்கக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் எச்சரிக்கின்றன.

*வரலாறு திரும்புகிறதா? – சுயெஸ் கால்வாய் பாடம்*

இன்றைய ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி, 1956-ஆம் ஆண்டு நிகழ்ந்த சுயெஸ் கால்வாய் நெருக்கடியை நினைவூட்டுகிறது. அன்று எகிப்தின் மீது படையெடுத்த பிரிட்டன், இறுதியில் சர்வதேச அழுத்தங்களால் பின்வாங்க நேரிட்டதுடன், அதன் பிரதமர் அந்தொனி ஈடன் பதவி விலகவும் அது வழிவகுத்தது. அதேபோன்றதொரு இராஜதந்திரத் தோல்வியை நோக்கி அமெரிக்கா தள்ளப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

*துப்பாக்கி விசையிலேயே விரல்!*

*இது ஈரானின் எச்சரிக்கை*

அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை ஒரு நேரடிப் பகைமைச் செயலாகவே ஈரான் கருதுகிறது. “நாங்கள் எப்போதும் துப்பாக்கி விசையிலேயே கை வைத்துள்ளோம்; தாக்குதல் மீண்டும் தொடங்கினால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இலக்குகள் மீது உடனடிப் பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறோம்” என ஈரானின் ஊடகப் பேச்சாளர் இப்ராஹிம் ஸோல்பகாரி கடுமை நிறைந்த தொனியில் தெரிவித்துள்ளார்.

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மூடிவைத்திருக்கும் ஈரான், முற்றுகை நீங்கும் வரை அதைத் திறக்கப்போவதில்லை, என்பதில் உறுதியாக உள்ளது.

அமெரிக்காவின் இராணுவ வலிமை ஒருபுறம் இருந்தாலும், சீனாவின் தலையீடு மற்றும் ஈரானின் தரைப்படை வலு ஆகியவற்றால் ட்ரம்ப்பின் இராஜதந்திரம் பெரும் சவாலைச் சந்தித்துள்ளது.

இந்த “யுத்தச் சதுரங்கத்தில்” அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை உலகம் அச்சத்துடன் கவனித்துக்கொண்டிருக்கிறது.

– த.ரஸ்மிலா

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )