
ஈரான் போர் எதிரொலி: உலகளவில் ஆணுறைக்கு கடும் தட்டுப்பாடு – விலையை உயர்த்தும் பிரபல நிறுவனம்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடி காரணமாக ஆணுறை விலைகளை 30 வீதம் அல்லது அதற்கு மேல் அதிகரிக்க நேர்ந்துள்ளதாக உலகின் முன்னணி ஆணுறை தயாரிப்பு நிறுவனமான காரெக்ஸ் தெரிவித்துள்ளது.
தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விநியோகத்தை ஈரான் போர் தொடர்ந்து சீர்குலைத்தால், இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி கோ மியா கியாட் தெரிவித்துள்ளார்.
மோதல் தொடங்கியதிலிருந்து உற்பத்திச் செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளதாக காரெக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோ மியா கியாட் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவைத் தளமாகக் கொண்ட இந்நிறுவனம், ஆண்டுக்கு ஐந்து பில்லியனுக்கும் அதிகமான ஆணுறைகளை உற்பத்தி செய்கின்றது.
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை போன்ற அரசு சுகாதார அமைப்புகளுக்கும் இந்த நிறுவனம் ஆணுறைகளை விநியோகம் செய்கிறது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஹார்முஸ் நீரிணை ஊடாக பயணிக்கும் கப்பல்களைத் தாக்குவோம் என ஈரான் அச்சுறுத்தல் விடுத்ததிலிருந்து, உலகளாவிய எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நீரிணையை முற்றிலுமாக மூடி, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஆகியவற்றில் சுமார் ஐந்தில் ஒரு பங்கும், மற்ற பெட்ரோலிய வேதிப்பொருட்களும் பொதுவாக இந்த நீரிணை வழியாகவே கொண்டுச் செலப்படுகின்றன.
கரேக்ஸ், லேடெக்ஸைப் பாதுகாக்கப் பயன்படும் அம்மோனியா மற்றும் சிலிக்கான் அடிப்படையிலான மசகுப் பொருட்கள் உள்ளிட்ட, எண்ணெயிலிருந்து பெறப்படும் மூலப்பொருட்களைச் சார்ந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஆணுறைகளுக்கான தேவை சுமார் 30 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள மியா கியாட், அதிகரித்துள்ள சரக்குக் கட்டணங்கள் மற்றும் விநியோகத்தில் ஏற்படும் தாமதங்கள் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆணுறை விலைகளின் திடீர் உயர்வு, உலகின் எரிசக்தி சந்தைகளை ஏற்கனவே உலுக்கியுள்ள ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர், நுகர்வோருக்கான பிற பொருட்களின் விலைகளையும் எவ்வாறு உயர்த்துகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய ஆய்வின்படி, போர் காரணமாக விமானக் கட்டணங்கள் திடீரென உயர்ந்துள்ளன, குறைந்த விலை எகானமி டிக்கெட்டுகளின் விலை, ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட சராசரியாக 24 வீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வளைகுடா வழியாக நடைபெறும் சரக்கு விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு, உரங்களின் விலை உயர்வுக்கும், கணினி சில்லுகள் தயாரிக்கப் பயன்படும் ஹீலியத்திற்குத் தட்டுப்பாடு ஏற்படவும் வழிவகுத்துள்ளது.
உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்களைப் பெறுவதில் சிரமப்படுவதால், போத்தல் குடிநீர் தொழிலும் நெருக்கடியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக சர்க்கரை, பால் பொருட்கள் மற்றும் பழங்களின் விலைகள் உயரும் என்று ஐக்கிய நாடுகள் சபை இந்த மாத ஆரம்பத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
