அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா தீர்மானம்

அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா தீர்மானம்

அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா, உலக வர்த்தக அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும், தெரிவு செய்யப்பட்ட சில தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்தி வைத்தல் அல்லது அவற்றின் மீதான வரிகளை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எந்த வகையான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா, இந்தியா, கனடா உட்பட பல்வேறு நாடுகள் அதிக இறக்குமதியை விதிப்பதாகக் குற்றம் சுமத்தினார்.

இதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு முறையை ட்ரம்ப் அமுல்படுத்தினார்.

சீனா, இந்தியா, கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் என பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி அறிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. எனினும், அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள நாடுகள் முன்வந்ததையடுத்து, வரி வகிதம் சராசரியாக 10% ஆக குறைக்கப்பட்டது.

இதேவேளை, சீனாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிக்கு அந்நாடு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, வரி விகிதத்தை மேலும் அதிகரித்தது அமெரிக்கா.

பதிலுக்கு சீனாவும், அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்தது. வரியை அதிகரிப்பதில் நிகழ்ந்த போட்டி காரணமாக, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா 145% வரை உயர்த்தியது. பின்னர் அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை சீனா 125% வரை உயர்த்தியது.

இந்நிலையில், அமெரிக்கா – சீனா இடையே அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகளும் வரியை குறைக்க இணக்கம் தெரிவித்தன.

சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10% ஆக குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. இரு நாடுகளுக்கு இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This