
சமூக ஊடகங்களில் பரவி வரும் புதிய பொலிஸ் சீருடை வடிவமைப்புகள் குறித்து அமைச்சர் மறுப்பு
சமூக ஊடகங்களில் பரவி வரும் புதிய பொலிஸ் சீருடை வடிவமைப்புகள் குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரலகன்வில பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள பொலிஸ் சீருடையில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சமூக ஊடகங்களில் தற்போது வெளியாகி வரும் சீருடை வடிவமைப்புகள் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பொலிஸ் சீருடையை மாற்றுவது மட்டுமே அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என்றும், பொலிஸ் சேவையில் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை மேற்கொள்வதே முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பொலிஸ் அதிகாரியின் சீருடையை மாற்றுவதன் மூலம் அவரது நடத்தை மற்றும் செயற்பாடுகள் மாறிவிடாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களுடன் நெருக்கமான உறவைப் பேணி, நாட்டில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக்கூடிய பொலிஸ் படையொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய பொலிஸ் கட்டமைப்பை வெறுமனே புதிய சீருடையுடன் தொடர்வதை விட, தரமான புதிய பொலிஸ் சேவையொன்றை உருவாக்குவதே நாட்டின் தேவையாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
