
செம்மணி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள், தொல்பொருள் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவு செய்யப்படமாட்டாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக ஆதாரங்களின் அடிப்படையில் முறையான அறிவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
செம்மணி பகுதியில் பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 574 பேரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அகழ்வுப் பணிகளுக்கு தொல்பொருள் ஆய்வுப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமை தாங்கி வருகின்றார்.
அவர் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில், தொற்றுநோய் அல்லது இயற்கை அனர்த்தம் காரணமாகப் பெருமளவிலான உடல்கள் விரைவாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பேராசிரியர் சோமதேவவின் அறிக்கை தொல்பொருள் ஆய்வு தொடர்பான அறிக்கை மட்டுமே என்றும், உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறியும் மருத்துவ சட்ட விசாரணை அறிக்கை அல்ல என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
உயிரிழப்புக்கான காரணம் மற்றும் முறை தொடர்பான ஆய்வுகளை யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரியும் அவரது குழுவினரும் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த விசாரணைகளில் இனம், மதம் மற்றும் சாதி ஆகியவற்றுக்கு இடமில்லை என்றும், உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
