காவன்திஸ்ஸ யானையின் மரணம் குறித்த விசாரணைகளுக்கு விசேட நிபுணர் குழு நியமனம்

காவன்திஸ்ஸ யானையின் மரணம் குறித்த விசாரணைகளுக்கு விசேட நிபுணர் குழு நியமனம்

சீயம்பலாங்கமுவ பகுதியில் உயிரிழந்த ‘காவன்திஸ்ஸ’ யானையின் மரணம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், காட்டு யானைகளின் நலனைப் பாதுகாப்பதற்கான நிலையான செயற்பாட்டு நடைமுறைகளைத் தயாரிப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார்.

முன்னாள் அமைச்சின் செயலாளர் ஏ.எச். சரத் விஜேசிங்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், பேராசிரியர்களான டி. சமிந்த பெர்னாண்டோ, ஏ.ஜி. அனில் புஷ்பகுமார, யு.கே. கலிங்க பத்மலால், கலாநிதி ஜகத் குணவர்தன மற்றும் சட்டத்தரணி சரக ஜயரத்ன ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் டபிள்யூ.டபிள்யூ. ஹரிசன் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவன்திஸ்ஸ யானையின் மரணத்துக்கான நேரடி மற்றும் மறைமுகக் காரணங்கள் என்ன, அதற்கான சிகிச்சைகளின்போது ஏதேனும் தவறுகள் அல்லது கவனக்குறைவுகள் இடம்பெற்றனவா என்பன குறித்து இந்தக் குழு ஆராயவுள்ளது.

மேலும், காட்டு யானைகளின் நலனை உறுதிப்படுத்துவதற்கான நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை உருவாக்குவதுடன், யானைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பிலும் பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளது.

இந்த விசாரணைகளுக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளவும் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விசாரணையின் இறுதி அறிக்கை மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய முழுமையான அறிக்கையை, 30 நாட்களுக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க இந்தக் குழு திட்டமிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )