
ஈரான் – அமெரிக்க போர் முடிவுக்கு வந்தது! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான ஈரானுடனான ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டதாகவும் அறிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள கப்பல்கள் தங்களது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், எண்ணெய் ஏற்றுமதியை மீட்டெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, ஹோர்முஸ் நீரிணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீளவும் திறக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலையில் ஒப்பந்தம் எட்டப்பட்டதை உறுதி செய்திருந்தார்.
இந்த ஒப்பந்தம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஒப்பந்தத்தின் துல்லியமான நிபந்தனைகள் வெளியாகவில்லை.
எனினும், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவர இந்த ஒப்பந்தம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நேர வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் நான் வீதம் சரிந்த, அதே நேரத்தில் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் 4.6 வீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தது.
இதேவேளை, ஈரான் தனது அணுசக்தித் திட்டம் தொடர்பாக தெளிவான நடவடிக்கைகளை எடுத்தால், அதன் மீதான தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாக நான்கு ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளனர்.
இதன்படி, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறக்கூடாது என இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோக்கத்திற்காக அமெரிக்கா, ஈரான் மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
மேலும் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்பாடின்றி திறக்கக் கோருவதோடு, லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
