
விமான நிலையத்தில் 25 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பேங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவரது பயணப் பொதியில் உலர்ந்த பழப் பொதிகளுக்குள் இருந்த பழங்களை அகற்றிவிட்டு, அதற்குள் மிக சூட்சுமமான முறையில் சுமார் 2,505 கிராம் நிறையுடைய குஷ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் கொழும்பைச் சேர்ந்த 33 வயதுடைய புகைப்பட கலைஞர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதி என்பன விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
