இன்றும் விசேட பஸ் சேவைகள்

இன்றும் விசேட பஸ் சேவைகள்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக இன்றும் (13) பயணிகளின் தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாளாந்தம் சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு மேலதிகமாக, கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்வதற்காக 1500 மேலதிக பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக அதன் தலைவர் தெரிவித்தார்.

எனினும், இன்றைய தினம் பயணிகளின் வருகையைப் பொறுத்து தேவையான அளவு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் கூறினார்.

இதேவேளை, நாளை (14) உறவினர் வீடுகளுக்குச் செல்லும் மக்களுக்காக பிராந்திய டிப்போக்கள் ஊடாகத் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்றும் நாளையும் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நேற்று பிற்பகல் முதல் குறைவாகக் காணப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் அஸங்க சமரசிங்க தெரிவித்தார்.

இருப்பினும், கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் கடுகதி ரயில்கள், தபால் ரயில்கள் மற்றும் நகரங்களுக்கிடையிலான (Intercity) கடுகதி ரயில்கள் அனைத்தும் வழமை போன்று இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )