ஈரானுடனான போரில் வெற்றிபெற்று விட்டோம் – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

ஈரானுடனான போரில் வெற்றிபெற்று விட்டோம் – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.

இந்தப் போரில் ஏற்கனவே வெற்றி பெறப்பட்டுவிட்டதாகவும், ஆட்சி மாற்ற இலக்கு அடையப்பட்டுவிட்டதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், ஈரான் இதனை முற்றிலும் மறுத்துள்ளது.

சமாதான முயற்சிகள் இருந்தபோதிலும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

தெற்கு தெஹ்ரானில் உள்ள பொதுமக்கள் மையங்கள் மீதான தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில், மேலும் 1,000 அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்படவுள்ளனர்.

எவ்வாறாயினும், போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க, அமெரிக்க-ஈரானியப் பிரதிநிதிகள் இந்த வாரத் தொடக்கத்தில் இஸ்லாமாபாத்தில் சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூன்று வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதன் இராணுவத் திறன்களில் பெரும் பகுதி அழிக்கப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் சரியான தலைவர்களுடன் பேசி வருகிறோம், அவர்கள் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளனர்,” என்று ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.

போர் நிறுத்தத்திற்கான முயற்சிகளை எகிப்து, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முன்னெடுத்து வருகின்றன.

தனது மருமகன் ஜாரெட் குஷ்னர், வெள்ளை மாளிகை தூதர் ஸ்டீவ் விட்காஃப், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோர் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக டிரம்ப் மேலும் கூறினார்.

“ஈரான் எங்களுக்கு ஒரு பரிசை வழங்கினர், அந்தப் பரிசு இன்று வந்து சேர்ந்தது. அது மிகவும் மதிப்புமிக்க பரிசு, அது என்னவென்று நான் உங்களிடம் கூற மாட்டேன், ஆனால் அது மிகவும் முக்கியமானது,” என்று டிரம்ப் கூறினார்.

இதற்கிடையில், அமெரிக்காவுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை என்று ஈரானிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் நிர்வாகம், மத்தியஸ்தர்கள் மூலம் ஈரானிடம் 15 அம்ச போர்நிறுத்தத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் இராணுவத் தலைமை மத்தியஸ்தம் செய்து வருகிறது.

இராணுவத் தளபதி ஆசிம் முனீர், டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசியதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.

டிரம்ப் மற்றும் முனீர் இடையேயான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஈரான் அதிபர் மசூத் பெஸ்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ​​பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் அவசரத் தேவை குறித்து இருவரும் ஒப்புக்கொண்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்தது.

டிரம்பின் மத்திய கிழக்குத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இஸ்லாமாபாத் செல்லத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால், அமெரிக்கத் தரப்பில் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் முன்மொழியப்படுவதாக பாகிஸ்தானிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், ஈரான் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தையில் யார் பங்கேற்பார் என்பது குறித்து எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் அவர்களே பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )