ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் RCB அணிகள் பெரும் தொகைக்கு விற்பனையானது

ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் RCB அணிகள் பெரும் தொகைக்கு விற்பனையானது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் பிரபலமான அணிகளான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் கல் சோமானி வாங்கியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேபோல் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஆதித்ய பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு 1.78 பில்லியன் அமெரிக்க டொலருக்கு முழுமையாக வாங்கியுள்ளது.

இந்த கூட்டமைப்பில், டைம்ஸ் ஒஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ், மற்றும் பிளாக்ஸ்டோனின் பெர்ப்பெச்சுவல் பிரைவேட் ஈக்விட்டி” முதலீட்டு நிறுவனம் ஆகியவையும் இணைந்துள்ளன.

எனினும், ஆதித்ய பிர்லா குழுமமே இதற்குத் தலைமை தாங்குகிறது.

இந்த விற்பனையில்ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆண்களுக்கான அணி மற்றும் டபிள்யூ.பி.எல். பெண்களுக்கான அணி ஆகிய இரண்டும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு அணியின் புதிய தலைவராக, ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆர்யமன் பிர்லா நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, அமெரிக்க தொழிலதிபர் கல் சோமணி தலைமையிலான கூட்டமைப்பு, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 100 சதவீத பங்குகளை சுமார் 15,286 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் மதிப்புமிக்க அணியாக ராஜஸ்தான் ரோயல்ஸ் உருவெடுத்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய தொகைக்கு ஒரு அணி விற்கப்பட்டிருப்பது கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கல் சோமணி, 2021ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சிறு பங்கை தனது வசம் வைத்திருந்தார்.

எவ்வாறாயினும், கல் சோமணி ஐபிஎல் 2026 பருவத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை தன்வசப்படுத்த முடியாது எனவும், 2026 பருவத்திற்கு பின்னர் அணிக்கு உரிமையாளராக மாற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணி விற்பனை செய்யப்பட்ட போதிலும், அணியின் பயிற்சி ஊழியர்களிலோ அல்லது உயர் கிரிக்கெட் நிர்வாகத்திலோ எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இயக்குநராக செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )