
இன்றும் சீரான முறையில் எரிபொருள் விநியோகம் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு
இன்றைய தினமும் எரிபொருள் விநியோகம் சீரான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை ஆறு மணி முதல் எரிபொருள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடி ஏற்படாமல் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருளை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே தேவையற்ற முறையில் எரிபொருளை சேமித்து வைப்பதையும், வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களை கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென் கொரியாவில் இருந்து எரிபொருளை ஏற்றிவரும் கப்பல்கள் திட்டமிட்ட திகதியில் நாட்டை வந்தடையும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், நேற்றைய தினம் 8400 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 8600 மெட்ரிக் தொன் டீசல் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதால் நாட்டின் எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
