
போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தம் – பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியை மொஸ்கோவில் சந்திக்க தனது சிறப்பு தூதுவருக்கு உத்தரவிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதிய வரைவு ஒப்பந்தம் குறித்து ரஷ்யாவிடம் இன்னும் ஆலோசனை நடத்தப்படவில்லை ரஷ்ய தரப்பு தெரிவித்திருந்தது.
மேலும், திட்டத்தில் முன்வைக்கப்படும் திருத்தங்களை ஏற்காமல் போகலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் ஆரம்ப கட்டமைப்பிற்கு ஆதரவாக இருந்தபோதிலும், அமைதி ஒப்பந்தம் தொடர்பான ஒப்பந்தம் கணிசமான மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தால் நிலைமை அடிப்படையில் வேறுபட்டிருக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி புதிய திட்டத்தின் நகல் கிடைக்கவில்லை என்று லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பா, அமெரிக்கவின் அமைதி முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகள் பகிரங்க கருத்துகளை வெளியிடவில்லை.
எனினும், அமெரிக்க இராணுவச் செயலாளர் டான் டிரிஸ்கோலும் ரஷ்ய பிரதிநிதிகளும் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அபுதாபியில் சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆழமாக முரண்படும் சில பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாமல் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
