முல்லைத்தீவு இளைஞர் மரணம் – மூன்று இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்ட்டதையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை சேர்ந்த மூன்று இராணுவ சிப்பாய்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியை சேர்ந்த 05 இளைஞர்களை இரும்பு சேகரிக்க வருமாறு அழைத்து இராணுவ சிப்பாய்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதன்போது அங்கிருந்து தப்பிப்பதற்காக குளத்தில் குதித்த போதே குறித்த இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் சிவநகரில் பிரதேசத்தில் அமைந்துள்ள 12 ஆவது சிங்கப் படையணி முகாமை அப்புறப்படுத்துவதற்கு சில நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததாக ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஏழாம் திகதி இரவு, அகற்றப்பட்ட இரும்பு மற்றும் வெளிப்புறப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக முகாம் வளாகத்தினுள் அனுமதியின்றி நுழைந்த ஐவரை வெளியேற்றுவதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது தப்பிச் செல்ல முயன்ற ஒருவரே முத்துஐயன்கட்டுக் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாகவும் ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் ஒட்டுசுட்டான் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.