பண்டிகை காலத்தில் , பல மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிய இலங்கை போக்குவரத்து சபை

ஏப்ரல் பண்டிகை காலத்தில், 1300 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை இந்த வருமானம் பதிவு செய்யப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து முகாமையாளர் எச். பியதிலக்க ஊடகங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபை சாதாரண பஸ் கட்டணங்களின் கீழ் இயங்கிய நேரத்தில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும், பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
பண்டிகை காலங்களில் இலங்கை போக்குவரத்து சபை ஈட்டிய அதிக வருமானம் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னர் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து திரும்பும் பயணிகளின் வசதிக்காக ஆரம்பிக்கப்பட்ட விசேட பஸ் சேவைகள் மேலும் தொடரும் என்றும் அவர் கூறினார்