வித்தாயாவின் படுகொலையில்  தாமதிக்கப்பட்ட நீதி எதைக் கூறுகிறது?

வித்தாயாவின் படுகொலையில் தாமதிக்கப்பட்ட நீதி எதைக் கூறுகிறது?

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இடம்பெற்ற சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை, இலங்கையின் வரலாற்றில் மிகுந்த அதிர்ச்சியூட்டிய குற்றச்சம்பவங்களில் ஒன்றாகும். இந்தச் சம்பவம் ஒரு தனிப்பட்ட குற்றமாக மட்டும் இல்லாமல், பெண்கள் பாதுகாப்பு, சட்டத்தின் செயல்திறன் மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றை மையப்படுத்திய தேசிய அளவிலான விவாதமாக மாறியது.

வித்தியாவின் வழக்கில் உயர்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் நீண்ட வழக்குப் போராட்டத்திற்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் கிடைத்த ஒரு நியாயமான பதிலாக இந்தத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் முழு நாட்டையும் உலுக்கியிருந்தது.

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவியான வித்தியா கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் படி, சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து குற்றவாளிகள் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தனர்.

அந்த மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் கடந்த புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பை அறிவித்தது. வழக்கு விசாரணை இடம்பெற்ற நேரத்தில், சிறையில் உள்ள குற்றவாளிகள் ‘Zoom’ தொழிநுட்பம் மூலம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

விசாரணையின் போது, குற்றவாளிகளில் ஒருவர் சிறையில் உயிரிழந்திருந்தமை மற்றும் ஏனைய சாட்சிகள், ஆதாரங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், இரு பிரதிவாதிகள் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணை நிறைவில் முக்கிய குற்றவாளியான சுவிஸ் குமார் உள்ளிட்ட மீதமுள்ள நான்கு பேருக்கு மேல் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் கிடைத்த இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கும், சமூக நீதிக்குமான ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இத்தீர்ப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டங்களின் நடைமுறைப்படுத்தலின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் சட்ட நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என வித்தியாவின் படுகொலைக்கு நீதிகோரிப் போராடிய மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இலங்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்கப் பல சட்டங்கள் இயங்கிவருகின்றன. பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை, குழந்தைகள் பாதுகாப்பு போன்ற துறைகளில் சட்ட அடித்தளம் பலமாக இருந்தாலும், நடைமுறைச் செயற்பாடுகள் பலவீனமாக இருப்பது பெரும் சிக்கலாக உள்ளது.

பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு அளிக்க அச்சப்படுகின்றனர். சமூக அழுத்தம், அவமானம், பொலிஸ் செயல்முறை மீதான நம்பிக்கை குறைவு போன்ற காரணிகள் இதற்குக் காரணமாகின்றன. மேலும், வழக்குகள் நீண்ட காலம் நீடிப்பதும் நீதியைத் தாமதப்படுத்துகிறது.

பெண்கள் பாதுகாப்பு என்பதை சட்டங்களை உருவாக்குவதில் மட்டும் செய்ய முடியாது. குறித்த சட்டங்கள் செயல்படுத்தப்படுவது அவசியமாகும். பொலிஸ்துறை, நீதித்துறை, சமூக சேவை அமைப்புகள் மற்றும் கல்வி முறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இதற்காக பாலின உணர்வுப் (gender sensitivity) பயிற்சிகள், விரைவு நீதிமன்றங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் மற்றும் சட்ட உதவி போன்ற பல நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

இலங்கையின் குற்றவியல் நீதித்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. வழக்குகள் நீண்டகாலம் நிலுவையில் இருப்பது, சாட்சிகள் பாதுகாப்பின்மை, விசாரணை தரம் குறைவு மற்றும் நீதிமன்ற செயல்முறை மந்தம் ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.

அதன் காரணமாகத் தான் வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிக்கானத் தண்டனை உறுதிப்படுத்த ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலம் எடுத்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

தாமதிக்கப்பட்ட நீதியானது மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும். வித்தியா வழக்கில் இந்தத் தீர்ப்பானது உடனடியாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இடம்பெற்றிருந்தால் இவ்வாறான சம்பவங்கள் சமூகத்தில் இடம்பெறுவது ஓரளவு குறைந்திருக்கும் எனவும் மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை விரைவுபடுத்துதல், டிஜிட்டல் ஆதாரங்களை ஏற்றுக்கொள்ளும் சட்ட மாற்றங்கள், சாட்சி பாதுகாப்புத் திட்டங்கள் ஆகிய சீர்திருத்தங்கள் இலங்கைக்கு அவசியம். அதன் ஊடாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு விரைவான நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்.

நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது ஒரு அரசாங்கத்துக்கு முக்கியமான சவாலாகும். நீதிமன்ற தீர்ப்புகள் தாமதமின்றி, வெளிப்படையாக வழங்கப்படும்போது மட்டுமே மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும். கடந்தகால அரசுகள் விட்ட தவறை தற்போதைய அரசும் விடக்கூடாது.

அதற்காகவே சமகால அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தை மக்கள் கையளித்திருந்தனர்.

இன்றைய உலகில் நீதியின் தரம் என்பது ஒரு நாட்டின் ஜனநாயகத் தரத்தை நிர்ணயிக்கும் முக்கிய அளவுகோலாக உள்ளது. எனவே, நீதித்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் நாட்டை மேலும் பலப்படுத்தும்.

நீதித்துறையை வலுப்படுத்துவதாகவே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. என்றாலும்,  நீதித்துறையின் செயல்பாடுகள் இன்னமும் தாமதாகவே உள்ளன. எனவே, வித்தியாவின் வழக்கை முன்னுதாரணமாகக் கொண்டு அரசாங்கம் விரைவான சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு தாமதமின்றி பாதிக்கப்பட்டத் தரப்பினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

சுப்ரமணியம் நிசாந்தன்

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )