வாகன இறக்குமதி – அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
![வாகன இறக்குமதி – அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல் வாகன இறக்குமதி – அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்](https://oruvan.com/wp-content/uploads/2024/12/vayc.png)
அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் அரசாங்கத்திடம் இருக்கும் அந்நியச் செலாவணி இருப்புக்களின் அடிப்படையில் வாகன இறக்குமதிக்காக ஒதுக்கப்படும் அந்நியச் செலாவணி தீர்மானிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு படிப்படியான அணுகுமுறை, அரசாங்கத்தின் பொருளாதார மீட்சி மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மையின் எச்சரிக்கையான சமநிலையை பிரதிபலிப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், மேலும் விவரங்களை வழங்க அந்த அதிகாரி மறுத்துள்ளதுடன், அதிகாரப்பூர்வ முடிவுகள் முறையாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பேருந்துகள் இறக்குமதியை உள்ளடக்கிய முதலாம் கட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும், அடுத்து ஆண்டு பெப்ரவரிக்குள், இரண்டாம் கட்டமாக தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்களின் இறக்குமதி மீண்டும் தொடங்கும் என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன கூறினார்.
“கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார மந்தநிலையின் போது அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாக்க 2020இல் செயல்படுத்தப்பட்ட வாகன இறக்குமதிக்கான தற்காலிக இடைநீக்கத்தை அரசாங்கம் தளர்த்தத் தொடங்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.
கட்டுப்பாடுகளை தளர்ப்பதற்கு படிப்படியான அணுகுமுறை, விதிமுறைகள் மற்றும் காலக்கெடு நிதி அமைச்சகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், வாகன இறக்குமதிகளை நிர்வகிக்க கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
“இந்த நடவடிக்கைகள் வெளிநாட்டு இருப்புக்களை குறைத்து, கையிருப்புக்கு வழிவகுக்கும் அதிகப்படியான வாகன இறக்குமதிகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன” என்று குணசேனா கூறினார்.