
அனுராதபுரம், கலன்பிந்துனுவெவ பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு
அனுராதபுரம், கலன்பிந்துனுவெவ பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தந்தை மற்றும் மகள் என இருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக தந்தை பெட்ரோல் ஊற்றி தனது சொந்த வீட்டிற்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கலேன்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரகம் காலனியின் படிகாரமடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 43 வயதாக தந்தையும், அவரது 13 வயது மகளும் தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் 36 வயது மனைவி, 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயது மாமியார் ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வீடு தீப்பிடித்த நேரத்தில், மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் மனைவியின் தாய் மட்டுமே வீட்டிற்குள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மகன் சம்பவ இடத்திற்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிலிருந்து தனது தாய் மற்றும் சகோதரிகளை மீட்க முயன்றபோது 20 வயது மகன் தீக்காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
