போர் களத்தில் நுழையும் தற்கொலை ட்ரோன்!

போர் களத்தில் நுழையும் தற்கொலை ட்ரோன்!

தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் , ஹிஸ்புல்லா முதன்முறையாக அதிநவீன மறைந்து தாக்கும் “தற்கொலை” ஆளில்லா விமானத்தை பயன்படுத்தியுள்ளது .

வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவத் தளங்கள் மற்றும் குடியிருப்புகளைக் குறிவைத்து கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்ட தொடர்ச்சியான பெரும் எதிர்த்தாக்குதல்களின் போது, ​​இந்த அதிநவீன வான்வழி ஆயுதம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது .

இஸ்ரேலின் கான் செய்தி நிறுவனத்தின்படி , இந்தப் புதிய டிரோன், மின்காந்த அலைகளின் குறுக்கீடுகள் இருந்தபோதிலும் செயல்படக்கூடிய காட்சி வழிகாட்டு அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது .

ரேடார் கருவிகளால் கண்டறியப்படாமல் பயணிக்கும் திறன், பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பறக்கும் திறன், ஐந்து கிலோகிராம் வரை வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் மற்றும் கட்டிடங்களுக்கு உள்ளேயும் இயக்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவை இதன் சில முக்கிய அம்சங்களாகும் .

திங்கள்கிழமை அதிகாலையில் தொடங்கிய இந்தத் தாக்குதல்கள், கிரியாட் ஷ்மோனா, மெதுலா மற்றும் திபேரியாஸ் உள்ளிட்ட பகுதிகள் ட்ரோன்கள் மூலம் குறிவைத்துள்ளன.

மேலும், கோலானி படைப்பிரிவுக்குச் சொந்தமான பயிற்சி மையங்களும், டெஃபென் இராணுவத் தளமும் குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளால் இந்த ட்ரோன்களில் ஒரு சிறிய எண்ணிக்கையை மட்டுமே இடைமறிக்க முடிந்ததாகவும், மீதமுள்ளவை அவற்றின் குறிவைத்த இலக்குகளில் தரையிறங்கியதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன .

இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஷேக் நயீம் காசிம், லெபனானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு முற்றிலுமாக நிறுத்தப்படும் வரை, பதிலடி கொடுக்கும் இந்த நோக்கம் கைவிடப்படாது என்று தெரிவித்தார் .

2024ஆம் ஆண்டு எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தங்களை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வருவதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்த அமைப்பு வலியுறுத்துகிறது .

தெற்கு லெபனானில் உள்ள டயர் மற்றும் நபாட்டியா நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்திய கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து இராணுவ நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )