
உலகப் பொருளாதாரத்தின் அதிர்வுகளும் இலங்கையினது களநிலை யதார்த்தமும் வெறும் அரசியல் பேச்சுகள் தீர்வாகுமா?
“எண்ணெய் விலையைக் குறையுங்கள், வாகனங்களுக்கு வரி விதிக்காதீர்கள், மின்சாரக் கட்டணத்தைக் குறையுங்கள்! நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இதையெல்லாம் எப்போதோ குறைத்திருப்போம்” – தற்போதைய அரசியல் சூழலில் இலங்கையின் எதிர்க்கட்சியினரிடம் இருந்து தினமும் கேட்கக்கூடிய வழக்கமான மேடைப் பேச்சுகள் இவைதான்.
உண்மையாகவே எரிபொருள், மின்சாரம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்தால், இந்த நாட்டின் குடிமக்களாகிய நமக்கும் அது பெரும் மகிழ்ச்சிதான். வரிகள் குறைக்கப்பட்டால் அது சாதாரண அடித்தட்டு மக்களுக்குப் பாரியதொரு நிவாரணமாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதைப் பற்றி மீண்டும் நாம் புதிதாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை.
இந்த நாட்டின் குடிமக்களாகிய நமக்கும் அது புரிகிறது, நாமும் அதைத்தான் விரும்புகிறோம். ஆனால், இந்த நேரத்தில் நமது நாடு ஓர் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் தனித்து வாழும் தீவு அல்ல. நாமும் அந்த உலகளாவிய பொருளாதாரச் சங்கிலித் தொடரின் ஓர் அங்கமே. எனவே, சர்வதேச ரீதியாக ஏற்படும் அதிர்வுகள் நம்மை நேரடியாகப் பாதிக்கும் என்பதை நாம் இந்த யதார்த்தமான கோணத்தில்தான் பார்க்க வேண்டியுள்ளது. அதை விடுத்து வெற்று மேடைப் பேச்சுகளைப் பேசிக்கொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
சர்வதேச அரசியல் அரங்கில் அமெரிக்காவும் ஈரானும் தற்போது ‘நெருப்பும் நீரும்’ போல மிகக் கடுமையான முரண்பாடுகளுடன் மோதிக்கொள்கின்றன.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான பிராந்திய யுத்தம் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. இந்த யுத்தம் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தி வரும் பொருளாதாரத் தாக்கம் நமக்கு மட்டுமல்ல, சுமார் 700 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கையிருப்பை மார்புதட்டி வைத்துள்ள இந்தியா போன்ற பிரமாண்டமான நாடுகளுக்கே இப்போது வலிக்கத் தொடங்கியிருக்கிறது.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைவது நாம் அறிந்ததே. கடந்த மூன்று வருடங்களின் பின்னர், ஓர் அமெரிக்க டொலருக்கு 350 ரூபாவைச் செலுத்த வேண்டிய அவல நிலை கடந்த வாரம் நேர்ந்தது.
அதேநேரம், 700 பில்லியன் டொலர் கையிருப்பு வைத்துள்ள இந்தியாவின் நாணய மதிப்பும்கூட இந்த மே மாதத்தில் டொலருக்கு நிகராக 97 ரூபா வரை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நம்மிடம் இருப்பதோ வெறும் 7 அல்லது 7.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே. ஓர் எண்ணெய் கப்பலைக்கூட வரவழைப்பதற்கு நம்மிடம் 50 மில்லியன் டொலர் கையிருப்பு இல்லாமல், நாடே எரிபொருள் வரிசைகளில் நின்ற கசப்பான கடந்த கால வரலாறு நமக்கு மறந்துவிடக்கூடாது.
இலங்கை மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நாணய மதிப்புகள் அமெரிக்க டொலருக்கு நிகராக ஏன் வீழ்ச்சியடைகின்றன? உலகளாவிய மற்றும் உள்நாட்டு அழுத்தங்கள் இதற்கு எவ்வாறு காரணமாகின்றன??, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலாவதாக, இந்தியாவும் நம்மைப் போலத்தான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் ஒரு நாடு. இந்த வளைகுடா யுத்தம் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகி வருகிறது. இப்போதும், இந்த வினாடியிலும் அது நடந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாக, எண்ணெய்க்காகச் செலுத்த வேண்டிய டொலரின் அளவு இரு நாடுகளுக்கும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இரண்டாவதாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தற்போது வளர்ந்து வரும் சந்தைகளில் உள்ள தங்களது பங்குகளை விற்றுவிட்டு, அதிக லாபமும் பாதுகாப்பும் தரும் அமெரிக்கச் சொத்துகளில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். அப்படியென்றால் என்ன நடக்கும்? இந்தியாவிலிருந்து வெளியேறும் இந்த முதலீட்டாளர்கள் உள்நாட்டு ரூபாக்களை விற்றுவிட்டு டொலர்களை வாங்குவார்கள். அப்போது ரூபா இன்னும் பலவீனமடையும். அதாவது மூலதனம் முழுவதும் அமெரிக்கா நோக்கிப் பாய்வது நடக்கிறது.
மறுபுறம், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டுக்காண்டு அதிகரித்துச் செல்வது மற்றுமொரு ஆபத்தான அறிகுறியாகும். ஏற்றுமதி வருமானத்தை விட, இறக்குமதிச் செலவு அதிகரிப்பதே வர்த்தகப் பற்றாக்குறையாகும். கடந்த 2023 இல் 4.9 பில்லியன் டொலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, 2024 இல் 6.1 பில்லியன் டொலராக உயர்ந்தது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதியும், வெளிநாட்டுப் பண அனுப்புதல்களும் சாதனை அளவில் அதிகரித்த போதிலும், வர்த்தகப் பற்றாக்குறை 7.9 பில்லியன் டொலராக மேலும் மோசமடைந்தது. இதற்கு 2025 இல் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமையும், நுகர்வுப் பொருட்களுக்கான தேவை எகிறியமையுமே காரணமாகும். ஏற்றுமதி வருமானம் உயர்ந்த போதிலும், நாம் கொண்டு வரும் பொருட்களுக்கான இறக்குமதிச் செலவு பல மடங்கு அதிகரித்தது.
தற்போது 2026 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில், இந்த யுத்தச் சூழலால் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளுடன் கப்பல் கட்டணங்களும், காப்புறுதிச் செலவுகளும் சர்வதேச அளவில் உயர்ந்துவிட்டன. இந்தத் தருணத்தில், ரூபா வீழ்ச்சியைத் தடுக்கவும் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும் நாம் எதைச் செய்தாலும் வெளிநாட்டுக் கையிருப்பை, அதாவது டொலரின் அளவை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும். இல்லையென்றால், எண்ணெய்க் கப்பல் ஒன்றைக்கூடக் கொண்டுவருவதற்கு 50 மில்லியன் டொலர் இல்லாமல் மக்கள் வரிசைகளில் நின்ற அதே பழைய நிலைமை மீண்டும் உருவாகிவிடும்.
எனவே, நாடாளுமன்றத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் வெறும் கூச்சல்களைப் போட்டுக் கொண்டிருக்காமல், உலக நிலைவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகப் பொருளாதார நெருக்கடிக்கு, குறைந்தது இந்த மத்திய கிழக்கு யுத்தம் முடியும் வரையிலாவது எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றிப் பேச வேண்டும். அதுவரை, குடிமக்களாகிய நாம் எரிபொருள் நுகர்வைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும்.
முடிந்தவரை பயணங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். நாம் பரிமாறிக்கொள்ளும் சோற்றுத் தட்டில் ஒரு சோற்றுப் பருக்கையையேனும் குப்பைத் தொட்டியில் போடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய ஓர் இக்கட்டான காலத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
வர்த்தகப் பற்றாக்குறைத் தரவுப்பட்டியல்
2023 ஆம் ஆண்டு: 4.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
2024 ஆம் ஆண்டு: 6.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
2025 ஆம் ஆண்டு: 7.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (வாகன இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் விளைவு)
குறிப்பு: 2026 ஆம் ஆண்டின் தற்போதைய உலகச் சூழலில், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாகக் கப்பல் மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை இலங்கையின் பொருளாதார மீட்சிக்குக் கூடுதல் சவாலாக மாறியுள்ளது.
– Dharmaraja Rasmila
