நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தால் அரசியல் பழிவாங்கல்கள் – சபையில் சஜித் கேள்வி

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.
இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தால் அன்றும், இன்றும் அரசியல் பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கேள்வி – “ஆட்சிக்கு வந்தவுடன் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என மக்களுக்கு உறுதியளித்திருந்தீர்கள். ஆக, இந்த சட்டத்தில் எப்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்?
அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரையில் சட்டம் நிறுத்தி வைக்கப்படுமா?
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?
இந்த சட்டத்தின் கீழ் இது வரையில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? எத்தனை பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்? எத்தனை பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது?”
எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு பதிலளித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,
பதில் – “நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் விரைவில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
குறித்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை அடையாளம் கண்டு, அது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படும்.
இதுவரையில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எவரும் கைது செய்யப்படவில்லை. சிறையில் அடைக்கப்படவில்லை. யார் மீதும் வழக்கு தொடரப்படவில்லை” எனத் தெரிவித்தார்.