
இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் அணி
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி மூன்றுப் போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள இந்த தொடரில் விளையாட சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிகள் அனைத்தும் ஜனவரி ஏழு, ஒன்பது மற்றும் 11ஆம் திகதிகளில் தம்புளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ண தொடருக்கு முன்னதாக அணிக்கு மதிப்பு மிக்க பயிற்சியை இந்த தொடர் வழங்கும் என பாகிஸ்தான கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
டி20 உலகக் கிண்ண தொடரின் அனைத்துப் போட்டிகளையும் பாகிஸ்தான் இலங்கையிலேயே விளையாடவுள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக பாகிஸ்தான் அணி டி20 போட்டிகளுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது.
அண்மையில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி முத்தரப்பு டி20 போட்டித் தொடரில் விளையாடி இருந்தது. இதில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியை தனதாக்கியிருந்தது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியை தவிர உலகக் கிண்ண தொடருக்கு முன்னதாக அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.
டி20 உலகக் கிண்ண தொடரில் குழு ஏ இல் பாகிஸ்தான் அணி இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்தியா, நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகளுக்கு எதிராக குழு நிலை போட்டிகளில் விளையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
