கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்துக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க திடீர் விஜயம்

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய கட்டுமானப் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை
இந்த ஆண்டுக்குள் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தில் எஞ்சியுள்ள 50% செயல்பாடுகளையும் விரைவாக முடிக்க வேண்டியதன் அவசியத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஆகியோர் கட்டுமானத்தில் உள்ள துறைமுக கிழக்கு முனையத்துக்கு அவசர ஆய்வு பயணமொன்றை மேற்கொண்டு திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தனர்.
2014 முதல் 2022 வரை எந்த ஒரு கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்த கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டுமானப் பணிகள் 2022 முதல் மந்த நிலையில் இருந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அதை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கிழக்கு முனையம் (ECT) துறைமுக ஊழியர்களால் வென்றெடுக்கப்பட்ட ஒரு சொத்து என்றும், அது எந்த வகையிலும் வேறு எந்த தரப்பினருக்கும் வழங்கப்பட மாட்டாது என்றும், இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் மிகவும் திறமையான மற்றும் நவீன முகாமைத்துவ கட்டமைப்புடன் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.