ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இடையே சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) முற்பகல் இடம்பெற்றது.
கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணையை வழங்குவதற்கு முன்னதாக நடத்தப்படும் ஐந்தாவது மீளாய்வின் இடைக்காலக் கலந்துரையாடலாக இது நடத்தப்பட்டது.
பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டை, அதிலிருந்து விடுவித்து அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும், இதற்காக அரசாங்கத்திடம் மூலோபாயத் திட்டம் இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போதுதெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு, சர்வதேச நாணய நிதியம் வழங்கும் ஆதரவை தான் பெரிதும் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொருளாதார மறுமலர்ச்சியை அடையக்கூடிய நாடாக இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு, சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்குகளைத் தாண்டிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் இனங்கண்டுள்ளதாகவும், அதற்காக அரசாங்கம் முறையான திட்டத்தை வகுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார மறுமலர்ச்சி இலக்கை அடைவதற்கு, அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது அவசியம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காக முதலீட்டிற்கு உகந்த சூழலை நாட்டில் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியதுடன், எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஆர். அபொன்சு, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பாக, அதன் தூதுக்குழுத் தலைவர் Evan Papageorgiou, இந்நாட்டிற்கான அதன் நிரந்தரப் பிரதிநிதி Martha Woldemichael உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.