நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை – காரணம் கூறும் மகிந்த

இரு வேறு காரணங்களுக்கான எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலுமிருந்து தங்காலைக்கு தன்னைப் பார்க்க வரும் மக்களைத் தவறவிட முடியாது எனவும், தங்காலையிலிருந்து நுகேகொடைக்கு பயணிக்க கூடுதல் நேரத்தை செலவிட வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள போராட்டப் பேரணியில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிகழ்வில் நான் பங்கேற்காததை சிலர் தவறாகப் புரிந்து கொள்ளலாம்.
ஆனால், இரண்டு காரணங்களுக்காக அந்தப் பேரணியில் கலந்துகொள்ள முடியாது.
இதேவேளை, அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டம் தண்ணீர் போத்தல் போன்றது. போதைப்பொருள் சோதனைகளை நடத்தும்போது அரசாங்கம் எங்களை நோக்கி விரல் நீட்டியது.
ஆனால் இப்போது நாங்கள் சொல்வது சரி என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
