ஆகஸ் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியில்? இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் செல்வாக்கை நிலைநிறுத்தும் சீனா

ஆகஸ் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியில்? இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் செல்வாக்கை நிலைநிறுத்தும் சீனா

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள ஆகஸ் (AUKUS) பாதுகாப்புக் கூட்டணி, 21 ஆம் நூற்றாண்டின் முக்கியமான பாதுகாப்பு மற்றும் புவியியல் அரசியல் முயற்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பூகோள அரசியலில் முக்கிய பாதுகாப்பு நகர்வாகவும் கருதப்படுகிறது.

ஆகஸ் கூட்டணியின் மைய நோக்கம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் தன்னிச்சையான நகர்வுகளால் உருவாகி வரும் பாதுகாப்பு சவால்களுக்கு ஒருங்கிணைந்த பதிலை வழங்குவதும், சீனாவின் அதிகரித்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார தாக்கத்தை சமநிலைப்படுத்துவதும் ஆகும்.

ஆகஸ் கூட்டணியின் மிக முக்கிய அம்சமாக, அணு இயக்கம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தை அவுஸ்திரேலியாவிற்கு வழங்குவதாகும். இது வழக்கமான இராணுவ ஒத்துழைப்பை விட மிக உயர்ந்த நிலை தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புக் கூட்டாண்மையை வெளிப்படுத்தும் நோக்கமாக சர்வதேச நாடுகள் பார்க்கின்றன.

ஆகஸ் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், அவுஸ்திரேலியா தனது கடற்படை திறனை மேம்படுத்தி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு முக்கியமான கடல்சார் பாதுகாப்பு சக்தியாக உருவெடுக்கும். இது பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வலுவான சக்தியாக உருவெடுக்கவும், தமது கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பாக முன்னெடுக்கவும், சீனாவின் தன்னிச்சையானநகர்வுகளை தடுக்கவும் பெரிதும் உதவும்.

எனினும், இந்த நோக்கங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஆகஸ் திட்டம் தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஆகஸ் திட்டத்திற்குத் தேவையான நிதி முதலீடு மிகப்பெரியது. குறிப்பாக 245 பில்லியன் அமெரிக்க டொலர்வரை தேவையென கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அணு இயக்கம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவை அதிக செலவுகளை உடையவை. இதற்கான போதுமான நிதி ஒதுக்கீடு மற்றும் நீண்டகால பொருளாதார திட்டமிடல் இல்லாதது குறித்து அவுஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது. இந்த நிதி குறைபாடு, திட்டத்தின் காலக்கெடு மற்றும் செயல்திறனை நேரடியாக பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

இதனுடன், தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான சிக்கல்களும் முக்கிய தடையாக உள்ளது. அணு இயக்கத் தொழில்நுட்பம் மிகுந்த பாதுகாப்பு மற்றும் ரகசியத் தன்மையைக் கொண்டதாக இருப்பதால், அதனை மற்றொரு நாட்டிற்கு பகிர்வது எளிதான செயல் அல்ல என பிரித்தானியாவின் பாதுகாப்புத் தரப்பு கருதுகிறது.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் தங்களது முன்னேற்றமான தொழில்நுட்பங்களை பகிர்வதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கடும் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதால் இத்திட்டம் குறித்து மீள் பரிசீலனைகள் அவசியம் என பிரித்தானிய பாதுகாப்புத் தரப்பு வலியுறுத்தியுள்ளது. இதனால், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல தாமதங்கள் ஏற்படுகின்றன.

மேலும், உற்பத்தி திறன் மற்றும் மனித வளம் ஆகியவை தொடர்பான சவால்களும் உள்ளன. அணு நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்துக்கு மிகவும் நுட்பமான தொழில்நுட்ப அறிவும், அனுபவமுள்ள பொறியாளர்களும் தேவைப்படுத்துகிறது. தற்போது, இந்த துறையில் திறமையான பணியாளர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுவதுடன், தேவையான உற்பத்தி வசதிகளும் போதுமான அளவில் இல்லை என பிரித்தானியா கூறியுள்ளது.

பிரித்தானியாவின் பாதுகாப்பு தொழில்துறை ஏற்கனவே பல முக்கிய இராணுவத் திட்டங்களில் ஈடுபட்டிருப்பது, ஆகஸ் திட்டத்திற்குத் தேவையான கவனமும் வளங்களும் முழுமையாக வழங்கப்படாமல் இருக்கக் காரணமாக உள்ளது. இதுவும் திட்ட முன்னேற்றத்தில் ஒரு முக்கிய தடையாக கருதப்படுகிறது.

இந்த அனைத்து சவால்களும் சேர்ந்து, ஆகஸ் கூட்டணியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கையிடுவதாவது, இந்த திட்டம் தொடர்ச்சியாக தாமதமடையும் பட்சத்தில், கூட்டணியின் நம்பகத்தன்மை பாதிக்கப்படலாம் என்பதாகும். குறிப்பாக, இந்த திட்டத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள அவுஸ்திரேலியாவிற்கு இது ஒரு முக்கியமான பாதுகாப்பு மற்றும் அரசியல் சவாலாக மாறும் என எச்சரித்துள்ளனர்.

ஆகஸ் திட்டம் எதிர்பார்த்தபடி முன்னேறவில்லை என்றால், கூட்டணியில் உள்ள நாடுகளுக்கிடையிலான உறவுகளிலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உறவுகள் சீர்குலையும் என கருதப்படுகிறது.

ஆகஸ் பாதுகாப்புக் கூட்டணி, உலக அரசியலில் ஒரு முக்கியமான மாற்றத்தை குறிக்கும் முயற்சியாக இருந்தாலும், அதன் வெற்றி பல்வேறு பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் அரசியல் சவால்களை சமாளிப்பதிலேயே தங்கியுள்ளது.

இந்த சவால்களை திறம்பட சமாளிக்க முடியுமானால், ஆகஸ் கூட்டணி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு அமைப்பில் ஒரு முக்கிய தூணாக உருவெடுக்கக்கூடும். இல்லையெனில், இது ஒரு பெரிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய திட்டமாக இருந்தாலும், நடைமுறையில் சிக்கல்களுக்கு உள்ளாகும் முயற்சியாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

அவ்வாறு இடம்பெற்றால் அது சீனாவின் செல்வாக்கை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மேலும் அதிகரிக்கும் என்பதுடன், வல்லரசு நாடுகளால் முடியாத ஒரு விடயத்தை ஏனைய நாடுகளால் முன்னெடுக்க முடியாது என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2040ஆம் ஆண்டாகும் போது உலக வர்த்தகத்தில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முதன்மையான வர்த்தக வலயமாக மாறக்கூடும் என்ற கணிப்புகளின் அடிப்படையில்தான் இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற முயற்சியில் பிரித்தானியாவும் அமெரிக்காவும், மேற்படி நகர்வுகளை மேற்கொண்டுள்ள போதிலும் ஆகஸ் திட்டத்திற்கான முதலீடு பெரும் சவாலாக மாறியுள்ளது.

சு.நிசாந்தன்

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )