அதிக வரி விதித்து பாலர் பாடசாலை குழந்தையால் கூட திறைசேரியை நிரப்ப முடியும் – சஜித்

அரசாங்கம் நிரம்பி வழியும் திறைசேரி பற்றி பெருமை பேசுவதாகக் கூறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்களிடம் அதிக வரி விதிப்பதன் மூலம் எவரும், திறைசேரியை நிரப்ப முடியும் என்று தெரிவித்துள்ளார்.
ஏன் பாலர் பாடசாலை குழந்தைகளால் கூட இவ்வாறு செய்வதன் மூலம் திறைசேரியை நிரப்ப முடியும் என அவர் நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களிடம் அதிகமாக வரி விதித்துள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 15 சதவீத வருவாய் இலக்கை விட 287 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை அரச வருமானமான வசூலித்துள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையின்படி, 2025ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் என்றும், இருப்பினும், அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.9 சதவீத அரச வருவாயைப் பதிவு செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கான 2.3 சதவீதத்தை விட 3.8 சதவீத முதன்மை இருப்பை பதிவு செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் நேரடி மற்றும் மறைமுக வரிகளை அதிகரித்துள்ளது மற்றும் முதன்மை இருப்பில் 479 பில்லியன் ரூபா உபரியைப் பதிவு செய்துள்ளது, இது சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கான 2.3 சதவீதத்தை விட 1.5 சதவீதம் அதிகமாகும்.
எவ்வாறாயினும், அரசாங்கம் இந்த உபரி நிதியை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
