கொழும்பு துப்பாக்கி சூடு!! யாழில் மேலுமொருவர் கைது – போதை மாத்திரைகள், வாள் மீட்பு

கொழும்பு துப்பாக்கி சூடு!! யாழில் மேலுமொருவர் கைது – போதை மாத்திரைகள், வாள் மீட்பு

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய நபர்களுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பொலிஸார் காரினை மடக்கி சோதனை செய்த போது, காரினுள் இருந்து 5000 போதை மாத்திரைகள் மற்றும் வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

அதேவேளை காரின் இலக்க தகடு போலியானது எனவும், குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இயங்கும் வன்முறை கும்பல் ஒன்றுடன் சேர்ந்து இயங்கும் நபர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீதியில் நடந்து சென்றவர் மீது, துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு , பின்னர் கார் ஒன்றில் ஏறி, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் மீது காரினை ஏற்றி தப்பி சென்று இருந்தார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், பெண்ணொருவருடன் பிரதான சந்தேநபர்கள் உள்ளிட்ட மூவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும், கொழும்புக்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், அவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவரை கைது செய்யுமாறு கொழும்பில் இருந்து, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருப்பது தொடர்பிலான தகவல், பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து வீதியில் காரை மடக்கி சந்தேக நபரை கைது செய்தனர்.

அதன் போது காரினுள் 5000 போதை மாத்திரைகள் மற்றும் வாள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தவேளை, குறித்த நபர் உடுவில் பகுதியை சேர்ந்தவர் எனவும், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் சிலவற்றுடன் தொடர்புடையவர் எனவும் , வன்முறை கும்பல் ஒன்றுடன் சேர்ந்து இயங்குபவர் என தெரிய வந்துள்ளது.

அத்துடன் காரின் இலக்க தகடும் போலியானது என்பதனையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

அதேவேளை, போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்ட குற்றச்சாட்டில் யாழ் , நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முற்படுத்திய பின்னர் , கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு , நீதிமன்ற அனுமதியுடன் சந்தேக நபரை கொழும்பு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This