
“மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் – உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு”
மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் காரணமாக, உலகளாவிய எரிபொருள் சந்தையில் கடும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.
ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரானிய இராணுவம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3 புள்ளி 75 சதவீதம் அதிகரித்து, 97 புள்ளி 8 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை பகுதியைச் சுற்றி பதற்றம் அதிகரித்துள்ளதால், உலக சந்தைகளில் எரிபொருள் விநியோக தடைகள் ஏற்படலாம் என்ற அச்சமும் உருவாகியுள்ளது.
இந்த பதற்ற நிலைமை நீடித்தால், உலகளவில் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் விலைகள் மேலும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனிடையே, அமெரிக்காவும் ஈரானும் அண்மையில் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகி வந்த நிலையில், இரு தரப்புகளுக்கும் இடையே மீண்டும் மோதல் சூழல் உருவாகியுள்ளது.
பந்தர் அப்பாஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
எந்த நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்கள் குறிவைக்கப்பட்டன என்பது தெளிவாக வெளியிடப்படாதபோதிலும், ஈரானால் ஏவப்பட்ட சில ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தங்களது பாதுகாப்புப் படைகள் முறியடித்ததாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தங்களது பாதுகாப்பு நிலையை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக பங்குச் சந்தைகளிலும் இந்த பதற்றத்தின் தாக்கம் பிரதிபலித்துள்ளது. பல நாடுகளில் விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் ஆற்றல் துறைகளில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
மத்திய கிழக்கு பதற்றம் மேலும் தீவிரமடையாமல் இருக்க உடனடி இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையும் பல உலக நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
