
இலங்கையின் மீன்பிடித் துறையை நவீனமயப்படுத்த ஜப்பான் முழுமையான ஆதரவு
இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் ஜப்பான் வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமாடா அகியோ (ISOMATA Akio) தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தூதுவரின் விசேட அழைப்பின் பேரில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தூதுவரின் உத்தியோகபூர்வ வதிவிடத்திற்கு விஜயம் செய்தார்.
இந்தச் சந்திப்பின் போது இரு தரப்பினருக்கும் இடையில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அமைச்சர் ஜப்பான் தூதுவருடன் இராப்போசனத்திலும் கலந்துகொண்டார்.
கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் இந்தச் சந்திப்பின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவித் திட்டங்கள் மற்றும் அவற்றை மேலும் வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் விளக்கமளித்தார்.
கடற்றொழில் அமைச்சின் எதிர்கால இலக்குகள் மற்றும் இலங்கையின் கடல் வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அமைச்சர் தூதுவரிடம் எடுத்துரைத்தார்.
கடற்றொழில் துறையில் ஜப்பான் பெற்றுள்ள நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
ஜப்பான் தூதுவரின் உறுதிமொழி அமைச்சரின் விளக்கங்களைக் கேட்டறிந்த ஜப்பான் தூதுவர், இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயப்படுத்துவதற்கும், புதிய புத்தாக்கத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கும் ஜப்பான் அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், அதற்கான முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன்போது, அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித்த கமல் ஜினதாச, அமைச்சரின் பிரத்யேக செயலாளர் ஸ்ரீதரன் பூலோகராஜா, அமைச்சரின் இணைப்பு செயலாளர் கேசன் மதுசங்க ஆகியோரும் உடனிருந்தனர்.

