‘டித்வா’ அனர்த்த இழப்பீடு மற்றும் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் பணிப்பு

‘டித்வா’ அனர்த்த இழப்பீடு மற்றும் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் பணிப்பு

‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட மட்டத்தில் விசேட கவனம் செலுத்தி விரைவுபடுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

Rebuilding Sri Lanka திட்டத்தின் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவது தொடர்பாக, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்காக அலரி மாளிகையில் நேற்று (21) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்குத் தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் தற்போது வழங்கப்பட்டுள்ள நிலையில், அனர்த்த சேதங்கள் மற்றும் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாகாண மட்டத்தில் கண்காணிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். ‘டித்வா’ புயல் சேதங்களுக்காக 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் உரிய அபிவிருத்திப் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும், இழப்பீடு வழங்குவதில் பிரதேச மட்டத்தில் காணப்படும் தாமதங்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு, புனரமைப்புப் பணிகளுக்காக சுமார் 3.4 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்கமைய வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு, விவசாயம், கால்நடை, மீன்பிடி, கைத்தொழில் மற்றும் நீர்ப்பாசனம் உள்ளிட்ட துறைகளுக்கு இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை 25,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணிகள் 99 சதவீதமும், மீளக்குடியமர்வுக்கான 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணிகள் 95 சதவீதமும் நிறைவடைந்துள்ளன. அத்துடன், அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு தலா ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு, பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான இழப்பீடு, விசேட தேவையுடையோருக்கான இழப்பீடு மற்றும் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தலா 25,000 ரூபா வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்களை விரைவாகப் புனரமைத்தல், புதிய வீடுகளைக் கட்டுவதற்கு காணி ஒதுக்கீடு செய்தல் மற்றும் கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அறிக்கைகளை விரைவாகப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )