பிரித்தானிய பொருளாதாரத்திற்கு பேரிடி – IMF கடும் எச்சரிக்கை

பிரித்தானிய பொருளாதாரத்திற்கு பேரிடி – IMF கடும் எச்சரிக்கை

உலக போர் அதிர்வால் G7 நாடுகளில் பிரித்தானியாவுக்கு பின்வரிசை

உலக அரசியல் பதற்றங்களின் நிழலில், பொருளாதார முன்னேற்றப் பாதை மேலும் சவாலாக மாறி வருவதை புதிய கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, ஈரானை மையமாகக் கொண்ட மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தின் மீது மட்டுமின்றி, முன்னணி நாடுகளின் வளர்ச்சிக் கணிப்புகளிலும் தெளிவாக பிரதிபலிக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் அண்மைய அறிக்கையின்படி, பிரித்தானியாவின் இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு ஜனவரியில் கணிக்கப்பட்ட 1.3% இலிருந்து 0.8% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வளர்ந்த பொருளாதார நாடுகளில் பதிவான மிகப்பெரிய வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது. இதனால், ஜி7 நாடுகளில் பிரித்தானியா தற்போது இறுதி இடத்தில் உள்ளது.

அடுத்த ஆண்டிற்கான வளர்ச்சியும் 1.3% ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது முந்தைய கணிப்புகளை விட மேலும் குறைவாகும். இந்த பலவீனமான வளர்ச்சிக்கான முக்கிய காரணங்களாக, நீடிக்கும் மோதலின் தாக்கம், எதிர்பார்க்கப்பட்ட வட்டி விகிதக் குறைப்புகளில் தாமதம் மற்றும் எரிசக்தி விலைகள் நீண்டகாலமாக உயர்ந்த நிலையில் தொடர்கின்றமை போன்றன சுட்டிக்காட்டப்படுகின்றன.

இதனுடன், உலகளாவிய பொருளாதாரம் தனது இயல்பான முன்னேற்றப் பாதையிலிருந்து விலகும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மோதல் நீடித்தால், உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலையைத் தூண்டும் சூழ்நிலை உருவாகக்கூடும். பணவீக்க அழுத்தங்கள் தொடரும் நிலையில், மத்திய வங்கிகள் தங்கள் பணக்கொள்கைகளை மேலும் கடுமையாக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம் எனக் கூறப்படுகிறது.

பணவீக்கம் தொடர்பிலும் கவலைகள் அதிகரித்துள்ளன. பிரித்தானியாவில் இந்த ஆண்டில் 3.2% என்ற உயர்ந்த பணவீக்க விகிதம் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளதுடன், அது 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2% இலக்கை அடையும் முன், 04% ஐ தாண்டும் சாத்தியமும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, பிற முக்கிய பொருளாதாரங்களான ரஷ்யா, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா போன்ற நாடுகள் ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்புகளைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூரோ மண்டல நாடுகளிலும் வளர்ச்சி மந்தமாகவே நீடிக்கிறது. ஜெர்மன் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் குறைந்த அளவிலான வளர்ச்சியையே பதிவு செய்யும் எனக் கூறப்படுகிறது.

மேலும் சர்வதேச நாணய நிதியம் தனது கணிப்புகள் குறுகிய கால மோதலை அடிப்படையாகக் கொண்டவை எனத் தெரிவித்துள்ளதுடன், இந்த மோதல் நீடித்தால் எரிவாயு விலைகள் மும்மடங்காகவும், எண்ணெய் விலைகள் இருமடங்காகவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

இந்நிலையிலான பொருளாதாரச் சவால்கள், பிரித்தானிய அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகளின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்புச் செலவினங்கள், நலத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் சந்தை நம்பிக்கையைப் பேணுதல் ஆகியவற்றுக்கிடையில் சமநிலையை பேண வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பும், பிரித்தானியா குறைந்த வளர்ச்சியும் அதிக பணவீக்கமும் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் என முன்கூட்டியே சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார வல்லுநர்கள், அரசுகள் தங்களது நிதி பாதுகாப்பு இருப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றனர். இதற்காக வரி உயர்வுகள் அல்லது செலவினக் குறைப்புகள் போன்ற கடினமான தீர்மானங்கள் எதிர்காலத்தில் அவசியமாகலாம். அதேவேளை, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மாற்றம் அவசியமானதாயினும், அது உடனடி தீர்வாக அமையாது என்பதும் குறிப்பிடப்படுகிறது.

இதனுடன் இணைந்து, பாதுகாப்புச் செலவினங்களை விரைவாகவும் பெரிதாகவும் அதிகரிக்க வேண்டும் என்ற வாதமும் மேற்கு அரசியல் வட்டாரங்களில் வலுப்பெற்று வருகிறது.

முன்னாள் நேட்டோ பொதுச்செயலாளர் லார்ட் ராபர்ட்சன் உள்ளிட்ட சிலர், தற்போதைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள சூழலில், பாதுகாப்பு செலவினங்களை துரிதமாக உயர்த்துவது அவசியம் என வலியுறுத்துகின்றனர். ஆனால், பொருளாதாரம் ஏற்கனவே பல ஆண்டுகளாக மந்தநிலையிலேயே இருப்பதால், கூடுதல் பாதுகாப்புச் செலவினங்களை எதிர்கொள்ளும் அழுத்தத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானிய நிதி அமைச்சரின் நிலைப்பாடு இந்த முரண்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துகிறது. “தி மிரர்” பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தனது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

“இது நாம் தொடங்காத ஒரு போர். நாம் விரும்பாத ஒரு போர். தெளிவான வெளியேறும் திட்டம் இல்லாமல், அமெரிக்கா இந்தப் போரில் இறங்கியுள்ளது என்பது எனக்கு மிகுந்த விரக்தியையும் கோபத்தையும் அளிக்கிறது” என்றார்.

மொத்தத்தில், உலக அரசியல் மோதல்களின் தாக்கம் இப்போது வெறும் பாதுகாப்பு எல்லையைத் தாண்டி, நேரடியாக பொருளாதார கொள்கை வடிவமைப்பை பாதிக்கும் நிலையை எட்டியுள்ளது. பொருளாதார மந்தம், பாதுகாப்பு அழுத்தம், மற்றும் அரசியல் நம்பிக்கை ஆகியவை இணைந்து, மேற்கத்திய பொருளாதாரங்களுக்கு ஒரு புதிய சிக்கலான கட்டத்தை உருவாக்கியுள்ளன.

பாலகணேஷ் டிலுக்ஷா

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )