ஈரான் – அமெரிக்க பேச்சுவார்த்தை – இஸ்லாமாபாத்தை உற்றுநோக்கும் உலக நாடுகள்

ஈரான் – அமெரிக்க பேச்சுவார்த்தை – இஸ்லாமாபாத்தை உற்றுநோக்கும் உலக நாடுகள்

மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் ஹார்முஸ் நீரிணையை பகுதியளவு திறப்பதாக அறிவித்துள்ளது.

எனினும், கடுமையான நிபந்தனைகளையும் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபு ஊடகங்களின்படி, ஹார்முஸ் நீரிணை வழியாக தினமும் 15 கப்பல்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்றும், ஒவ்வொரு கப்பலும் ஈரானிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்றும் ஈரானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரின் மேற்பார்வையின் கீழ் இந்த புதிய முறை செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும், போருக்கு முந்தைய நிலைமை இனி இருக்காது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

போர் நிறுத்தத்தை நிலைநிறுத்துவதற்காக, வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள தனது சொத்துக்கள் இரண்டு வாரங்களுக்குள் மீட்கப்பட வேண்டும் என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.

அரபு ஊடகங்களின்படி, ஈரானின் இந்த நிபந்தனை ஒப்பந்தத்திற்கான ஒரு முக்கிய உத்தரவாதமாகும்.

மேலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைத் தீர்மானத்தின் மூலம் போர் முடிவுக்கு முறைப்படி அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் மீண்டும் போரைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.

அரபு ஊடக அறிக்கை ஒன்றின்படி, அப்பகுதியில் தனது இராணுவ இருப்பை அதிகரிக்க வேண்டாம் என அமெரிக்காவை ஈரான் வலியுறுத்தியுள்ளது.

மறுபுறம், யுரேனியம் செறிவூட்டல் விவகாரம் தொடர்பான ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பதாக ஈரானும் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகளுக்கு ஈரானின் முன்மொழிவுகளே அடிப்படை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் ஏழாம் திகதி அறிவித்திருந்தார்.

இதன் பின்னரே, ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் லெபனான் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த ஒப்பந்தத்தில் லெபனானையும் சேர்க்க வேண்டும் என ஈரான் விரும்புகிறது, ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அதற்கு மறுக்கின்றன. இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

லெபனான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூட நேரிடலாம் என ஈரான் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தைகள் இன்று இஸ்லாமாபாத்தில் இடம்பெறுகின்றது.

வெளிநாட்டுத் தூதுக்குழுக்கள் வரத் தொடங்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இஸ்லாமாபாத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )