பிரித்தானிய எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் – இராணுவத்தை கொண்டு தடுத்த அரசாங்கம்

பிரித்தானிய எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் – இராணுவத்தை கொண்டு தடுத்த அரசாங்கம்

பிரித்தானிய கடற்பரப்புகளில் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் ஒரு மாதத்திற்கும் மேல் இருந்ததாக பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் சுமார் ஒரு மாதம் பிரித்தானிய கடல் பகுதியில் தங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பிரித்தானிய படைகளும், நோர்வே உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளும் ரஷ்யக் கப்பல்களின் தீய செயல்பாடுகளைக் கண்காணித்துத் தடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வட அட்லாண்டிக்கில் ஒரு ரஷ்ய அகுலா தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலும், இரண்டு கூகி உளவு நீர்மூழ்கிக் கப்பல்களையும் ஒரு மாதத்திற்கும் மேலாகக் கண்காணித்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டவுனிங் தெருவில் இன்று ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும், அவை தற்போது இங்கிலாந்து கடல் பகுதியை விட்டு வெளியேறி, வடக்கு நோக்கிச் சென்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஒரு போர்க்கப்பல் மற்றும் விமானம் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய உள்கட்டமைப்புகளை கூகி நீர்மூழ்கிக் கப்பல்கள் குறிவைத்த போது, அதனை திசைதிருப்புவதற்காக அகுலா நீர்மூழ்கிக் கப்பல் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் ஹீலி சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், பிரித்தானியாவின் கேபிள்கள் மற்றும் குழாய்களுக்கு எவ்வித சேதமும் ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.

கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் மற்றும் குழாய் உட்கட்டமைப்புகளை சேதப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் பொறுத்துக்கொள்ளப்படாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு நடந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும் என அவர் ரஷ்ய ஜனாதிபதியை சாடியிருந்தார்.

ரஷ்யா பிரித்தானியாவிற்கு அச்சுறுத்தலாகவே இருப்பதாவும், எனினும், எதிர்கால நடவடிக்கைகளை கண்காணித்து, புடின் முன்னெடுக்கும் எந்தவொரு இரகசிய நடவடிக்கைகளையும் வெளிப்படுத்துவோம் என ஜோன் ஹீலி மேலும் தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )