
மின்னணு கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க முடியும்
இலங்கை அதிகாரிகளின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதற்கான மத்திய மின்னணு கட்டமைப்பு இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டின் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் கட்டமைப்பை, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க இன்று முற்பகல் 10 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைத்தார்.
இன்றைய தினத்திலிருந்து சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து அதிகாரிகளும், இந்த மின்னணு கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே தமது தகவல்களைப் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறை முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதுடன், வெளிப்படைத்தன்மையும் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
