
வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை இன்று முதல் மீளவும் அமுல்
கொழும்பு நகரில் வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை இன்று முதல் மீளவும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று காலை 6.00 மணி முதல் வழமை போன்று வாகனத் தரிப்பிட முகாமைத்துவம் மற்றும் கட்டண அறவீட்டு நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு, கொழும்பு மாநகர சபையின் நிதிக் குழு தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நிலவிய வாகன வரிசைகள் மற்றும் எரிபொருள் பெற வந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், கடந்த 18ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை வாகனத் தரிப்பிடக் கட்டண அறவீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
எனினும், எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR முறைமை மற்றும் ஒற்றை/இரட்டை இலக்க முறைமை ஊடாக எரிபொருள் வரிசைகள் குறைந்துள்ளன.
இதனைக் கருத்திற்கொண்டு, மீண்டும் கட்டணங்களை அறவிடுவது குறித்து கொழும்பு மாநகர சபை அவதானம் செலுத்தியிருந்தது.
இதன்படி, இன்று முதல் வாகனத் தரிப்பிட முகாமைத்துவமும் கட்டண அறவீடும் வழமை போன்று இடம்பெறும் என கொழும்பு மாநகர ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
