
போருக்குப் பின்னர் வலுவான சக்தியாக மாறியுள்ள ஈரான்!! அமெரிக்க ஆய்வாளர்
போருக்கு பின்னர் ஈரான் முன்னெப்போதும் இல்லாததை விட சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஆய்வாளரும், சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியருமான ரொபர்ட் போப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரொபர்ட் போப்பின் கூற்றுப்படி, ஈரான் இராணுவ எதிர்ப்பைத் தக்கவைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், உலகளாவிய எண்ணெய் விலைகள் மீதும் செல்வாக்கு செலுத்தும் நாடாகவும் மாறியுள்ளது.
ஈரானின் உத்தி உலக எரிசக்தி சந்தையை உலுக்கியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையைக் காட்டும் வரைபடத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், ஈரானின் நடவடிக்கைகள் இந்த முக்கியமான கடல்வழிப் பாதையின் போக்குவரத்தைப் பாதித்துள்ளதாக கூறியுள்ளார்.
இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை உலகளாவிய சந்தைகளில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் கூட்டணி பலவீனமடையும் அபாயத்தையும் அதிகரித்துள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வெறும் 17 நாட்களுக்குள் ஈரான் அசாதாரணமான மூலோபாய ஆதாயங்களை அடைந்துள்ளது என்றும், இது பிராந்தியத்தில் அதிகார சமநிலையை மாற்றுவதாகத் தெரிகிறது என்றும் ரொபர்ட் போப் மேலும் கூறினார்.
